பட்டென மைக்கை எடுத்த அமைச்சர்! திமுக நிகழ்ச்சியில் எம்ஜிஆர் பாடல்.. ஸ்டேஜை பார்த்தால் ஒரே பண மழை
தூத்துக்குடி: திமுக சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பாட்டுப் பாட, அங்கிருந்த திமுக தொண்டர்கள் உற்சாகமடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மகளிரணி கனிமொழி பங்கேற்றார்.
இந்தக் கூட்டத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மேடை ஏறிய அனிதா ராதாகிருஷ்ணன் அசத்தலாகப் பாட்டுப்பாடிக் கலக்கினார்,

திமுக நிகழ்ச்சி
திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் பிறந்தநாள் விழா தூத்துக்குடி மாவட்டம் தண்டுபத்து கிராமத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார்.

தங்க மோதிரம்
இந்த நிகழ்ச்சியில் சட்டசபைத் தேர்தலில் மிகச் சிறப்பாக பணியாற்றி திமுக வெல்லக் காரணமாக இருந்த 100 கட்சி நிர்வாகிகளுக்குத் தங்க மோதிரம் வழங்கப்பட்டது. சிறப்பாக பணியாற்றிய தொண்டர்களுக்குக் கனிமொழி எம்பி தங்க மோதிரம் வழங்கி பாராட்டினார். மேலும், இந்த நிகழ்ச்சியில் பிரபல திரைப்பட பின்னணிப் பாடகி அனுராதா ஸ்ரீராம் உள்ளிட்ட பாடகர்கள் கலந்து கொண்ட இசை நிகழ்ச்சி நடைபெற்றது,

திமுக மேடையில் எம்ஜிஆர் பாடல்
இசை நிகழ்ச்சியில் பாடகர்கள் பல சினிமா பாடல்களைப் பாடிக் கொண்டு இருந்தனர். அப்போது திடீரென மேடை ஏறிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மைக்கை வாங்கினார். இதையடுத்து யாரும் எதிர்பார்க்காத வகையில் எம்ஜிஆர் நடித்த வேட்டைக்காரன் படத்தின் "உன்னை அறிந்தால்" என்ற பாடலை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலக்கலாகப் பாடினார். அமைச்சர் பாடுவதைக் கேட்டு திமுக தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.

500 ரூபாய் நோட்டுகள்
தொண்டர்களின் ஆரவாரத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனும் உற்சாகமாகப் பாடினார். இப்போது திமுக நிர்வாகிகள் அமைச்சர் மீது மலரைத் தூவினர். மேலும், அமைச்சர் பாடி முடித்த பிறகு மேடை ஏறிய திமுக நிர்வாகி ஒருவர் 500 ரூபாய் நோட்டுக்களையே பூ போல் அமைச்சர் மீது தூவினார். இதைக் கண்டதும் அருகில் இருந்தவர்கள் சற்றே வியப்பு அடைந்தனர். பின்னர் அந்த 500 ரூபாய் நோட்டுகளை மேடையிலிருந்த இசைக்கலைஞர்கள் எடுத்துக் கொண்டனர்.












Click it and Unblock the Notifications