மனைவிக்காக திருச்செந்தூர் வீட்டுக்குள் நுழைந்த விருந்தாளி.. அதென்ன பச்சை கலரில்? உறைந்த மெஞ்ஞானபுரம்
தூத்துக்குடி: திருச்செந்தூர் வீட்டில் நடந்த சம்பவம் குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.. கைப்பற்றப்பட்ட கடிதத்தை கொண்டும் ஆய்வு நடந்து வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா மெஞ்ஞானபுரத்தை சேர்ந்தவர் சித்திரை செல்வின்.. இவர் ஓய்வுபெற்ற ஆசிரியர் ஆவார்.. இவருக்கு ஒரு மகனும், 3 மகள்களும் இருக்கிறார்கள்.. பிள்ளைகள் அனைவருக்குமே திருமணம் முடிந்துவிட்டது. அனைவருமே அவரவர் குடும்பத்தினருடன் வெளியூரில் வசித்து வருகிறார்கள்.

செல்வி: இந்தநிலையில், சென்னையில் வசித்து வரும் இவரின் மகனுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்திருக்கிறது. எனவே, குழந்தையை பார்ப்பதற்காக கடந்த மாதம் 17-ம் தேதி சித்திரை செல்வின் தன்னுடைய மனைவியை அழைத்துக் கொண்டு சென்னை சென்றிருக்கிறார்.. ஊருக்கு போகும்போது, தன்னுடைய வீட்டை பார்த்துக்கொள்ளும்படி, அந்த பகுதியை சேர்ந்த செல்வி என்பவரிடம் சாவியை தந்துவிட்டு போனார்.. செல்வியும் அந்த வீட்டை தினமும் பெருக்கி சுத்தப்படுத்தி பராமரித்து வந்தார்.
கடந்த 26-ந் தேதி செல்வி வழக்கம்போல, ஆசிரியர் வீட்டில் பராமரிப்பு பணியை செய்ய வந்தார்.. அப்போது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்... இதனால் பதறிப்போன செல்வி, உடனே இதைப்பற்றி சென்னையிலுள்ள சித்திரை செல்வினுக்கு தகவல் தந்தார்.. சித்திரை செல்வினும் உடனடியாக கிளம்பி மெஞ்ஞானபுரம் வந்து சேர்ந்தார்..
கைரேகை: அப்போது பீரோவில் வைத்திருந்த ரூ.60 ஆயிரம், ஒன்றரை பவுன் கம்மல், ஒரு ஜோடி வெள்ளி கொலுசு போன்றவை கொள்ளை போயிருந்ததை கண்டு அதிர்ந்து போனார். பின்னர் மெஞ்ஞானபுரம் போலீசில் சித்திரை செல்வின் புகார் செய்யவும், போலீசாரும் வீட்டிற்கு வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது வீட்டில் ஒரு கடிதம் கிடைத்தது. அந்த கடிதத்தை, திருடனே எழுதி வைத்துவிட்டு போயிருந்ததும் தெரியவந்தது.
அந்த கடிதத்தில், "என்னை மன்னித்து விடுங்கள்... நான் இன்னும் 1 மாதத்தில் திருப்பி தந்து விடுகிறேன். என் வீட்டில் உடம்பு சரியில்லை. அதனால் தான் மருத்துவச் செலவுக்காக திருடினேன்" என்று எழுதப்பட்டிருந்தது.. பச்சை நிற மை பேனாவால் எழுதிய கடிதத்தை பார்த்ததுமே விக்கித்த மெஞ்ஞானபுரம் போலீசார், அந்த கடிதத்தை கைப்பற்றியதுடன், அதிலிருக்கும் கைரேகையையும் பதிவு செய்துள்ளனர்..
யார் அது: அந்த மர்ம நபர் யார் என்றும் தெரியவில்லை.. சித்திரை செல்வின் ஊருக்கு சென்றிருப்பதை நன்றாக அறிந்து வைத்தவர்களே, இப்படியான செயலில் ஈடுபட்டிருக்க முடியும் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள்.. எனினும், இந்த அளவுக்கு உருக்கத்துடன் எழுதப்பட்ட கடிதத்தின் கைரேகையை வைத்து திருடன் யார் என்று போலீசார் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications