School Holiday: தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
தூத்துக்குடி: கோடை விடுமுறை முடிந்து கடந்த திங்கட்கிழமை அன்றுதான் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், இன்று (ஜூன் 9 ஆம் தேதி) தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை என்றாலே கொண்டாட்டம் தான். அந்த வகையில் சுமார் 45 நாட்கள் கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் கடந்த ஜூன் 2 ஆம் தேதி திறக்கப்பட்டுள்ளன. கடந்த ஒரு வாரமாக மாணவர்கள் பள்ளிக்கு சென்று வரும் நிலையில், சனி, ஞாயிறு விடுமுறை கிடைத்தது.

மீண்டும் பள்ளிகளுக்கு எப்போது விடுமுறை கிடைக்கும் என மாணவர்கள் ஆவலோடு காத்துள்ளனர். என்னதான் மாதக்கணக்கில் விடுமுறை கொண்டாடினாலும் அடுத்த முறை எப்போது வரும் என காலண்டரை எதிர்பார்ப்போடு பள்ளி மாணவர்கள் பார்ப்பது வழக்கம் தானே?
தமிழகத்தில் அரசு விடுமுறை தவிர்த்து கோவில் திருவிழாக்கள், கும்பாபிஷேகங்கள், மசூதி, தேவாலயங்களில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே விடுமுறை வழங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவிலில் விசாகத் திருவிழா 10 நாள்கள் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான ஜூன் 9 ஆம் தேதியான இன்று வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்ட செய்தி குறிப்பில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வைகாசி விசாகம் திருவிழாவை முன்னிட்டு வருகிற வைகாசி 26 ஆம் தேதி ஜூன் 9ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.
இந்த உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச் சட்டம் 1881 (Under Negotiable Instruments Act 1881) -இன் படி அறிவிக்கப்படவில்லை என்பதால் நாளை தூத்துக்குடி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வரும் ஜூன் 14 ஆம் தேதி இரண்டாம் சனிக்கிழமை பள்ளி மற்றும் கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலக வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications