ஆயிரக்கணக்கில் மீன்கள்.. மணப்பாடு கடற்கரையில் அரை கி.மீ. தூரத்துக்கு உயிருடன் கரை ஒதுங்கிய அதிசயம்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள மணப்பாடு கடற்கரையில் ஆயிரக்கணக்கான சாளை மீன்கள் உயிருடன் கரை ஒதுங்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு மீன்கள் கரையில் கிடந்ததால், மீனவர்களும் பொதுமக்களும் அவற்றை ஆர்வத்துடன் அள்ளிச் சென்றனர்...!!
உடன்குடி அருகே அமைந்துள்ள மணப்பாடு முழுக்க முழுக்க மீனவர்களை கொண்ட கிராமமாகும். இங்குள்ள மக்களில் சுமார் 90 சதவீதம் பேர் மீன்பிடித் தொழிலையே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். இந்த பகுதி மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வதில்லை. மற்ற நாட்களில் வெவ்வேறு நேரங்களில் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகிறார்கள்..

தூத்துக்குடி உடன்குடி
அதிகாலை 2 மணிக்கு கடலுக்குச் சென்று காலை 8 மணிக்குள் கரை திரும்புவது ஒரு வகை. முந்தைய நாள் மாலையில் கடலுக்குச் சென்று மறுநாள் காலையில் கரை திரும்புவது மற்றொரு வகை. சில மீனவர்கள் ஓரிரு நாட்கள் கடலிலேயே தங்கியிருந்து மீன்பிடித்துவிட்டு கரைக்கு வருகிறார்கள்.. இப்படி 3 விதமான முறைகளில் இப்பகுதி மக்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாட்டுப்படகுகள் மற்றும் கட்டுமரங்களைப் பயன்படுத்தியே அதிக அளவில் மீன்களை பிடித்து வருகிறார்கள்.. அதனால்ன் பாரம்பரிய மீன்பிடித் தொழில் இன்றளவும் இந்த மணப்பாடு பகுதியில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
மணப்பாடு மீன்களுக்கு மவுசு
மணப்பாடு கடற்கரையில் மீன்கள் கிடைக்கும் நேரங்களில் உடன்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பைக்குகளிலும், கார்களிலும் கூட்டம் கூட்டமாக வந்து மீன்களை வாங்கிச் செல்கிறார்கள்..
மீனவர்கள் கடலில் பிடித்த மீன்களை கரைக்கு கொண்டு வந்ததும், கடற்கரையிலேயே ஏலம் விடுவார்கள். ஏலம் முடிந்த பிறகுதான் மீன்களை பதப்படுத்துவதற்காக ஐஸ் கட்டிகளை போடுவார்கள். மணப்பாடு மீன்களுக்கென்று தனிச்சுவையும் மணமும் இருப்பதால்தான், உள்ளூர் மக்களிடம் மட்டுமல்லாமல் வெளியூர் வியாபாரிகளிடமும் இங்குள்ள மீன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. முக்கியமாக கேரளாவிலிருந்தும் ஏராளமான வியாபாரிகள் மணப்பாடு கடற்கரைக்கு வந்து மொத்தமாக மீன்களை வாங்கி செல்கிறார்கள்.
கரை ஒதுங்கிய சாளை மீன்கள்
இத்தகைய சிறப்புமிக்க மணப்பாடு கடற்கரையில்தான் இப்போது ஆயிரக்கணக்கான சாளை மீன்கள் உயிருடன் கரை ஒதுங்கியுள்ளன. நேற்று மாலை மணப்பாடு மணல் குன்றில் சவேரியார் வாழ்ந்த குகை அமைந்துள்ள பகுதியிலிருந்து வடபுற கடற்கரை வரை சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு மீன்கள் கூட்டம் கூட்டமாகக் கரை ஒதுங்கின.
கடலிலிருந்து இவ்வளவு அதிகமான மீன்கள் உயிருடன் கரைக்கு வந்ததைக் கண்ட மீனவர்கள் உடனடியாக அங்கு சென்று கூடைகளில் மீன்களை அள்ளினார்கள்.. கடற்கரைக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் பிளாஸ்டிக் பைகளில் மீன்களை எடுத்து சென்றனர். இதனால் கடற்கரையே பரபரப்பாகக் காணப்பட்டது.
கடல் நீரோட்டம் காரணமா?
இதுகுறித்து அப்பகுதி மக்கள் சொல்லும்போது, மணப்பாடு கடல் பகுதியில் நீரோட்டம் காரணமாக மணல் திட்டுகள் அதிகளவில் உருவாகி வருகின்றன. கடலில் கூட்டமாகச் சென்ற சாளை மீன்கள், இந்த நீரோட்ட மாற்றத்தின் காரணமாகவே கரைக்கு வந்திருக்கலாம்.. எனினும், மணப்பாடு பகுதியில் நிலவும் கடல் நீரோட்ட மாற்றம் குறித்து மாவட்ட நிர்வாகமும் மீன்வளத்துறை அதிகாரிகளும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.




Click it and Unblock the Notifications
