இருவரை கொன்ற 17 வயது தெய்வானை! 6 வயதிலேயே அப்படியாம்! மீண்டும் அஸ்ஸாமுக்கே செல்கிறதா யானை?
திருச்செந்தூர்: தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் பாகனையும் அவருடைய உறவினரையும் கொன்ற தெய்வானை யானை எப்படிப்பட்டது. எங்கிருந்து வாங்கப்பட்டது என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் இந்த யானை மன அழுத்தத்தில் இருந்த போது நடந்து கொண்ட விதத்தை பார்த்த அஸ்ஸாம் அரசு மீண்டும் தங்களிடமே திருப்பி தந்துவிடுமாறு கேட்டது. ஆனால் தமிழக அறங்காவல்துறை கொடுக்க மறுத்து பராமரித்து வருகிறது.

17 வயதான பெண் யானை தெய்வானை திருச்செந்தூர் முருகன் கோயிலில் வளர்க்கப்பட்டு வருகிறது. இது விழாக்களின் போது பக்தர்களுக்கு ஆசி வழங்கும். இந்த யானை அஸ்ஸாமிலிருந்து வரவழைக்கப்பட்டது. இதை திருச்செந்தூர் கோயில் அறங்காவலராக இருந்தவர் 2006 ஆம் ஆண்டு வாங்கி திருச்செந்தூர் முருகனுக்கு கொடுத்துவிட்டார்.
இந்த யானை அஸ்ஸாமிலிருந்து வந்த போது அதற்கு 6 வயது. தற்போது 17 வயதாகிறது. கிட்டதட்ட 11 ஆண்டுகளாக இந்த கோயிலில் இருந்து வருகிறது. இதை பாகன் உதயகுமார் என்பவர் பராமரித்து வந்தார். நேற்று (நவ.18) பிற்பகல் 3.30 மணிக்கு தெய்வானை அதன் கொட்டகையில் கட்டப்பட்டிருந்தது.
அங்கு பாகன் இருந்தார். அப்போது அவரை பார்க்க அவருடைய உறவினர் சிசுபாலன் என்பவர் சென்றிருந்தார். அப்போது இருவரையும் யானை திடீரென மிதித்ததால் அவர்கள் இருவரும் உயிரிழந்துவிட்டனர். இதுகுறித்து வனத்துறையினர் நேரில் வந்து ஆய்வு செய்தனர்.
யானை இருவரை மிதித்து கொன்றதால் திருச்செந்தூர் கோயில் 45 நிமிடங்கள் மூடப்பட்டு பின்பு நடை திறக்கப்பட்டது. தற்போது யானையானது சாந்தமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இருவரை கொன்றதற்கு பிறகு யானை உணவு சாப்பிடவில்லையாம். அதை உணவு உட்கொள்ள வைக்க முயற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இருவரை கொன்ற அந்த யானை மன அழுத்தத்தில் இருப்பதாக கால்நடைத் துறை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த யானையின் உண்மையான பெயர் பிரிரோனா. இது அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த லீலாபோரா என்பவருக்குச் சொந்தமானது.
இந்த யானையை திருச்சி, சமயபுரத்தைச் சேர்ந்த சுகுமாரன் என்பவர் வாங்கினார். அவரிடம் இருந்து 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருச்செந்தூர் கோயிலின் அப்போதைய அறங்காவலர் குழுத் தலைவராக இருந்த தேவதாச சுந்தரம் விலை கொடுத்து வாங்கி கோயிலுக்கு வழங்கினார்.
அப்போதுதான் அந்த யானைக்கு பிரிரோனா என்ற பெயர் மாற்றப்பட்டு தெய்வானை என சூட்டப்பட்டது. அப்போது அந்த யானைக்கு 6 வயது இருந்தது. அதே நாளில் தெய்வானையுடன் 3 வயது ஆண் யானையையும் தேவதாச சுந்தரம் கோயிலுக்கு வாங்கிக் கொடுத்தார்.
திருச்செந்தூரில் இருந்த தெய்வானை, திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அப்போதுதான் உதவி பாகனான காவடி காளிதாஸை கொன்றது.மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த இந்த யானையானது திருச்சி எம்.ஆர். பாளையத்தில் உள்ள யானைகள் பாதுகாப்பு, மறுவாழ்வு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அங்கிருந்த போது சரண் என்பவரை தூக்கி வீசித் தாக்கியது. இதனால் அந்த யானையை பாகன்கள் கையாளவே அஞ்சும் நிலை இருந்தது. இதனால் யானையை மீண்டும் அஸ்ஸாமுக்கே கொடுத்துவிடுமாறு அந்த மாநில அரசு கேட்டுக் கொண்டது. ஆனால் தமிழக அறங்காவல் துறையோ தெய்வானை முறையாக பராமரிக்கப்படும் என தெரிவித்து அந்த யானையை அஸ்ஸாமுக்கு கொடுக்க மறுத்துவிட்டது.
தெய்வானையுடன் வாங்கப்பட்ட ஆண் யானை குமரன், முகாமில் காட்டு யானைகள் தாக்கியதில் காயமடைந்து இறந்தது. தற்போது தெய்வானை தாக்கி இரண்டு பாகன்கள் உயிரிழந்ததை அடுத்து இந்த யானை மீண்டும் அஸ்ஸாமுக்கே செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications