காசேதான் கடவுளடா..சாமிய பார்க்க தலைக்கு 11000? ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சே! திருச்செந்தூர் பரிதாபம்
தூத்துக்குடி: உலகப்புகழ் பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு முருகன் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், முருகன் தரிசனத்திற்கு அழைத்துச் செல்ல கேரள பக்தரிடம், விரைவில் சாமி தரிசனம் செய்ய 4 பேருக்கு தலா 11000 ரூபாய் பணம் கேட்டதால், அவர் ஆந்திரமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்க் கடவுளாம் முருகப் பெருமானுக்கு தமிழகத்தில் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய அறுபடை வீடுகள் உள்ளது. இந்த கோவில்கள் மலைமேல் அமைந்துள்ள நிலையில், கடலோரம் உள்ளது திருசெந்தூர் கோவில் மட்டுமே.
திருச்சீரலைவாய் என்று பழங்காலத்தில் அழைக்கப்பட்ட திருச்செந்தூரில் முருகப் பெருமான் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமியாய் காட்சி தருகிறார். இந்த கோவிலில் முருகனை வழிபடுவதன் மூலம், திருமண தடை நீங்கும், தொழில் அபிவிருத்தி அடையும் என்பது நம்பிக்கை.

திருச்செந்தூர் கோவில்
மேலும், முருகனுக்கு உகந்த நாட்களில் விரதமிருந்து திருச்செந்தூர் முருகப் பெருமானை தரிசித்து விட்டு மீன் சமைத்து சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்யும் சிறப்பு வழக்கமும் இந்த தலத்தின் தனிச் சிறப்பு. கடந்த பல ஆண்டுகளாகவே திருச்செந்தூர் முருகப் பெருமானின் புகழ் பரவ பரவ, கோவிலுக்கு தினமும் வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. தலையா? கடல் அலையா என தெரியாத அளவுக்கு மக்கள் வெள்ளம் திருச்செந்தூர் நோக்கி அணி அணியாக செல்வார்கள்.
முருகன் தரிசனம்
அதிலும், தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற முருகனுக்கு உகந்த நாட்களோடு சூரசம்காரத்தின் போதும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் முருகப்பெருமானை தரிசிக்க வருவர். அது மட்டுமல்ல சுப முகூர்த்த தினங்களில் நூற்றுக்கணக்கான திருமணங்களும் இங்கு நடப்பது வழக்கம். தற்போது கும்பாபிஷேகம் நடைபெற்று முடிந்திருக்கும் நிலையில், நாளுக்கு நாள் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
லஞ்ச விவகாரம்
அவ்வாறு தரிசனத்துக்கு வரும் பக்தர்கள், நூறு ரூபாய் கட்டண தரிசனம், பொது தரிசனம் மற்றும் மூத்த குடிமக்கள் தரிசனம் என மூன்று வரிசைகளில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில், ஒரு நபருக்கு ஆயிரம் முதல் 10 ரூபாய் வரை பணம் பெற்றுக் கொண்டு திரிசுதந்திரர்கள் சுவாமி தரிசனம் செய்ய அழைத்துச் செல்வதாக புகார் சொல்லப்படுகிறது. இதனால் பொது தரிசனம், 100 ரூபாய் கட்டண தரிசன வரிசையில் சுவாமி தரிசனம் செய்ய தினம்தோறும் 3 மணி நேரம் முதல் 7 மணி நேரத்திற்கும் மேலாக பக்தர்கள் காத்திருக்கும் நிலை நீடித்து வருகிறது.
கோவில் மோசடி
இந்த நிலையில் கேரளாவில் இருந்து தரிசனம் செய்ய வந்த ஒரு குடும்பத்திடம் கோவில் பணியாளர் ஒருவர் சண்முக விலாஸ் மண்டபம் வழியாக தரிசனத்திற்கு அழைத்துச் செல்ல ஒரு பக்தருக்கு தலா 11 ஆயிரம் வீதம் 4 நபர்களுக்கு 44,000 ரூபாய் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் அங்கிருந்த கோவில் பணியாளர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். கோவிலில் பணியாளர்கள் மற்றும் அர்ச்சகர்கள் நாள்தோறும் பக்தர்களிடம் முறைகேடாக பணம் பெற்றுக் கொண்டு சுவாமி தரிசனத்திற்கு அழைத்துச் செல்வதாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகிறது.
விரைவு தரிசனம்
இது தொடர்பாக கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ள போதிலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில் கேரள தம்பதியினரிடம் தரிசனம் செய்வதற்காக தலா 11,000 ரூபாய் விதம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பேசு பொருளாக இருக்கிறது.
உரிய விசாரணை
இது தொடர்பாக கோவில் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து விளக்கம் கேட்பதற்காக கோவில் நிர்வாகத்தை தொடர்பு கொண்டபோது, உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications