நல்ல வேளை தப்பித்தோம்.. மானம் காப்பாற்றப்பட்டது.. வழக்கத்தைவிட சசிகலாவை கடுமையாக விளாசிய ஸ்டாலின்
Recommended Video

தூத்துக்குடி: வழக்கமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுகவினரை மட்டும் தாக்கி பேசி வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தூத்துக்குடியில் இன்று நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் சசிகலாவிற்கும் குட்டு வைத்துள்ளார்.
தூத்துக்குடியில் இன்று நடைபெற்ற திமுக பிரச்சார பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.
முன்னதாக, அவர் தூத்துக்குடி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் தனது சகோதரியும், திமுக வேட்பாளருமான கனிமொழியை வாக்காளர்களுக்கு அறிமுகம் செய்து வைத்து வாக்கு கேட்டார்.

ஜெயலலிதா மரணத்தில் மர்மம்
ஸ்டாலின் பேசுகையில் கூறியதாவது: ஜெயலலிதா மரணம் அடைந்த போது இது மர்ம மரணம் என்று, முதல்வராக இருந்தவரை ஓ.பன்னீர்செல்வம் கூறவில்லை. முதல்வர் பதவி பறிபோன பிறகுதான் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பன்னீர்செல்வம் தெரிவித்தார். வெளியில் எவ்வளவுதான் விமர்சனம் செய்து கொண்டாலும், சட்டசபையில் எந்த கட்சியாக இருந்தாலும் ஒருவருக்கு ஒருவர் பார்த்து நலம் விசாரித்துக் கொள்வது அரசியல் மாண்பு.

முதல்வர் பதவி பறிப்பு
அந்த வகையில் ஓ.பன்னீர்செல்வம் சட்டசபைக்கு வந்த போது முதல்வர் என்ற மரியாதைக்காக நாங்கள் அவரைப் பார்த்து வணங்கினோம். அவரைப் பார்த்து புன்முறுவல் பூத்தேன். பன்னீர்செல்வமும் என்னை பார்த்து சிரித்தார். இதுவே ஒரு ஆபத்தாக போய்விட்டது. எதிர்க்கட்சித் தலைவரைப் பார்த்து சிரிக்கலாமா? இந்த பதவியில் நீங்கள் இருப்பதற்கு லாயக்கு கிடையாது என்று கூறியவர் சசிகலா. எனவே பன்னீர்செல்வத்தின் முதல்வர் பதவியை பிடுங்கினார் சசிகலா. அதன் பிறகு முதல்வர் பதவிக்கு வருவதற்கு முயற்சி செய்தது அதே சசிகலா.

நல்லவேளை தப்பித்தோம்
ஆனால் சசிகலா, சட்டமன்றத்திற்குள் வரவில்லை. நல்லவேளை தப்பித்தோம். சட்டமன்ற மானம் காப்பாற்றப்பட்டது. ஆனால், வரக்கூடிய ஒரு சூழ்நிலையும் எழுந்தது. அந்த கட்சியின் எம்எல்ஏக்கள் அனைவராலும் முதல்வராக முன்மொழிய முயற்சி நடைபெற்றது. சசிகலாதான் முதல்வராக வரவேண்டும் என்று ஆளுநரிடம் அந்தக் கட்சியினர் சென்று முறையாக கடிதம் அளித்தனர். ஆளுநரும் பதவியேற்புக்கு தேதி குறித்தார்.

சசிகலா சிறையில்
திடீரென்று ஒருநாள் கூவத்தூரில், சசிகலா தலைமையில், எம்எல்ஏக்களை அடைத்து வைத்தனர். அந்த நேரத்தில்தான் சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியானது. சசிகலாவுக்கு 4 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. எனவேதான் வேறு ஒருவரை முதல்வர் ஆக்கலாம் என்று அவர் யோசித்துக் கொண்டிருந்தார். அப்போது அம்மையார் சசிகலா காலில் ஏதோ ஒன்று ஊர்ந்து சென்றது. அதை வைத்துதான் நான் மண்புழு என்று தெரிவித்தேன். ஸ்டாலின் சரமாரியாக விளாசி பேசினார்.












Click it and Unblock the Notifications