தூத்துக்குடி மீனவருக்கு அடித்த அதிர்ஷ்டம்.. சிக்கிய ஆயிரம் கிலோ பொக்கிஷம்.. இவ்வளவு விலையா?
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பெரியதாழை என்ற கிராமத்தில் மீனவர் வலையில் ஒரு டன் கொம்பு திருக்கை மீன் சிக்கியது. ஆயிரம் கிலோ எடையுடன் கூடிய திருகை மீன் கிடைப்பது மிகவும் அபூர்வமாகும். இதனால் மீனைக் கண்டு மகிழ்ச்சி அடைந்த மீனவர்கள், உடனே அதனை இழுத்துக் கொண்டு கரைக்கு திரும்பினார்கள். தொடர்ந்து திருக்கை மீன் ஏலம் விடப்பட்டது. அந்த மீன் ரூ.56 ஆயிரத்துக்கு ஏலம் போனது.
மீன்களில் பல கிலோ எடையுள்ள கொம்பு திருக்கை மீன் அபூர்வமான மீன் ஆகும். இந்த மீன் தட்டையான காற்றாடி போன்ற உடல் அமைப்பும், நீண்ட வாலும், உச்சியில் கண்களுடன் காணப்படும். திருக்கை மீன் ஆறு மீட்டர் வரை வளரக் கூடியது. இவை தங்களின் தலையில் கொம்பு போல, ஒரு இணைப்பிதுக்கத்தை கொண்டிருக்கும். கடலடியில் சேற்றில் அதற்கேற்ற கரும்பழுப்பு நிறத்தையும் கொண்டிருக்கும். இந்த திருக்கை மீன் கிடைத்தால் மீனவர்கள் குஷியாகிவிடுவார்கள்.

இந்த திருக்கை மீன் மூலம் தூத்துக்குடி மீனவருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பெரியதாழை என்ற மீனவ கிராமம் அமைந்துள்ளது. இங்கு வாழும் மீனவர்கள் சுமார் 600-க்கு மேற்பட்ட பைபா் படகுகளில் மீன் பிடித்து வருவது வழக்கம் ஆகும். நேற்று காலை வழக்கம் போல் ஜோசப் என்பவருடைய பைபர் படகில் பெரியதாழையைச் சேர்ந்த 5 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.
கடலில் வழக்கம்போல் அவர்கள் வலையை விரித்து மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது வலையை இழுக்க முடியாத அளவுக்கு அதிக பாரத்துடன் இருந்தது. ஏதோ பெரிய மீன் சிக்கி இருக்கலாம் என நினைத்து வலையை சிரமப்பட்டு இழுத்து பார்த்தார்கள். அதில் பெரிய திருக்கை மீன் சிக்கி இருந்தது தெரியவந்தது. பின்னர் வலையுடன் படகில் கயிறு கட்டி அந்த மீனை கரைக்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து அங்கு பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டது. அதன் உதவியுடன் கடற்கரையில் இருந்து சரக்கு வாகனத்தில் அந்த மீனை ஏற்றி வெளியே கொண்டு வந்தனர். பின்னர் ஏலக்கூடத்துக்கு மீனை கொண்டு சென்றார்கள்.
வலையில் சிக்கிய கொம்பு திருக்கை மீனை எடை போட்டபோது, அது ஒரு டன் இருந்தது தெரியவந்தது. பின்னர் நடந்த ஏலத்தில் கொம்பு திருக்கை மீன், 56 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. இதனால் மீனவர்கள் பெரிதும் மகிழ்ந்து போனார்கள்.. ஒரு டன் எடை கொண்ட கொம்பு திருக்கை மீனின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications