மாதந்தோறும் அக்கவுண்டிற்கே வரும் ரூ.600! வேலை இல்லாத இளைஞர்கள் அப்ளை பண்ணலாம்! தூத்துக்குடி ஆட்சியர்
தூத்துக்குடி: வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு அரசு வேலைக்கு எதிர்பார்த்து படித்து கொண்டு இருக்கும் வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம்தோறும் அவர்களது அக்கவுண்டிற்கே உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கும் மேல் ஆனவர்களுக்கு இந்த உதவித்தொகையினை அரசு வழங்கி வருகிறது. இந்த நிலையில், இந்நிதி உதவியை பெற தகுதியுள்ள இளைஞர்கள் விண்ணப்பிக்காலம் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதற்கு எப்படி விண்ணப்பிக்கலாம், என்னென்ன சான்றுகள் வேண்டும் உள்ளிட்ட முழு விவரங்களை இங்கே பார்க்காலம்.
தமிழகத்தில் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் அரசு வேலை கனவோடு போட்டி தேர்வுகளுக்காக தயாராகி வருகிறார்கள். வேலை வாய்ப்பு அலுவலகத்திலும் பதிவு செய்து விட்டு அரசு வேலை கிடைக்குமா? என எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கும் மேல் ஆனவர்களுக்கு அரசு உதவித்தொகையும் அளித்து வருகிறது.

தூத்துக்குடி கலெக்டர் அறிவிப்பு
இந்த நிதி உதவியை பெற தகுதியுள்ள இளைஞர்கள் விண்ணப்பிக்காலம் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக தூத்துக்குடி ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து எந்தவித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் பல ஆண்டுகளாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 9-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 10-ம் வகுப்பில் தோல்வியுற்றவருக்கு மாதம் ரூ.200- வழங்கப்படுகிறது.
யார் யார் விண்ணப்பிக்க முடியும்
10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300-வழங்கப்படும். பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400-ம், பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600 வீதம் 3 ஆண்டுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தொகை நேரடியாக மனுதாரரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவராக இருத்தல் வேண்டும். தொடர்ந்து பதிவை புதுப்பித்து இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோர் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியாது
அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்பட மாட்டாது. எனினும், தொலைதூரக் கல்வி அல்லது அஞ்சல் வழி மூலம் கல்வி கற்பவர்கள் உதவித் தொகை பெறலாம். ஏற்கனவே உதவித் தொகை பெற்று வருபவர்கள் தொடர்ந்து 3 ஆண்டுகள் வரை உதவித் தொகை பெற இதுவரை வங்கியில் குறிப்புகள் இடப்பட்ட வங்கி கணக்கு புத்தக நகலுடன், சுய உறுதிமொழி ஆவணம் பூர்த்தி செய்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்துக்கு தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.
எவ்வளவு உதவித்தொகை வழங்கப்படும்
மேலும் எந்தவிதமான அரசு உதவித்தொகையும் பெறாத மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை உதவித் தொகை வழங்கப்படுகிறது. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து ஓராண்டுகள் நிறைவு பெற்றவர்கள் உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம். 10-ம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் படித்தவர்களுக்கு மாதம் ரூ.600-ம், பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.750-ம், பட்டதாரிகளுக்கு ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.
எப்படி விண்ணப்பிப்பது
இந்த உதவித் தொகை பெறுவதற்கு தகுதி உள்ளவர்கள் அனைத்து கல்விச்சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் உதவித்தொகை பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. உதவித்தொகை பெறுவதால் வேலைவாய்ப்பு பரிந்துரைத்தலுக்கு எவ்வித தடையும் ஏற்படாது" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு வரப்பிரசாதம் போல அரசின் இந்த உதவித்தொகை திட்டம் உள்ளது. ஏனெனில், வேலை தேடும் காலங்களில் அவர்களின் அடிப்படைசெலவுகளுக்கு உபயோகமாகவும், வேலைக்கு விண்ணப்பிக்கவும் இந்த தொகையை பயன்படுத்த முடியும். அரசின் இந்த உதவி தொகையை பெறும் வரம்பிற்குள் வரும் இளைஞர்கள் மறக்காமல் விண்ணப்பித்து பயன்பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications