பட்டும் திருந்தாத தூத்துக்குடி விஏஓ.. பக்கா பிளானோடு ஆபிஸ் போன எட்டையபுரம் பெண்.. சரியான பாடம்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள கிராமத்தில், இறப்பு சான்றிதழ் வழங்க பெண்ணிடம் ரூ. 3,500 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது (Thoothukudi VAO arreste) செய்யப்பட்டுள்ளார். தனது தாத்தா பாட்டிக்கு இறப்பினை பதிவு செய்து சான்றிதழ் வழங்க விண்ணப்பித்து இருந்த பெண்ணிடம் லஞ்சம் கேட்ட நிலையில் அவர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தெரிவித்துள்ளார். தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்த யோசனைப்படி ரசாயனம் தடவிய லஞ்சப் பணத்தை பெற்றபோது விஏஓ செந்தில்குமார் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.
லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் சட்டப்படி குற்றம் ஆகும். எனினும் தமிழகத்தில் இன்றும் பல்வேறு இடங்களில் சான்றிதழ்கள் பெறுவதற்கு அதிகாரிகள் லஞ்சம் கேட்டு, போலீசில் சிக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் தூத்துக்குடி எட்டயபுரத்தில் பெண் விஏஓ ஒருவர் இறப்பு சான்றிதழ் வழங்குவதற்கு லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்த விவரம் வருமாறு:-

இறப்பு சான்றிதழ் கேட்டு விண்ணப்பம்
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பகுதியில் ஈராச்சி என்று கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் விஏஓவாக செந்தில்குமார் என்பவர் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் கடந்த நில நாட்களுக்கு முன்பு ஈராச்சி கிராமத்தை சேர்ந்த மாரீஸ்வரி என்ற பெண் தனது தாத்தா சுப்பு மற்றும் பாட்டி மாரியம்மாள் ஆகியோரின் இறப்பினை பதிவு செய்து சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
ரூ. 3,500 லஞ்சம் கேட்ட விஏஓ
அப்போது இறப்பு சான்றிதழ் வழங்க வேண்டும் என்றால் ரூ.3,500 தர வேண்டும் என லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சிக்குள்ளான மாரீஸ்வரி லஞ்சம் கொடுக்க விரும்பவில்லை. மேலும் இது பற்றி தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து மாரீஸ்வரியிடம் போலீசார் ஆலோசனை கொடுத்தனர். அதன்படி, நேற்று வீஏஓ ஆபிசிற்கு சென்றார். அங்கிருந்த விஏஓ செந்தில் குமாரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்து அனுப்பிய ரசாயன் தடவிய ரூபாய் நோட்டுக்களை கொடுத்தார்.
கையும் களவுமாக கைது
அப்போது அந்த பணத்தை செந்தில் குமார் வாங்கிக் கொண்டார். இதனை அங்கு மறைந்திருந்து கண்காணித்த லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு பீட்டர் பால்துரை தலைமையிலான போலீசார் அதிரடியாக உள்ளே சென்று கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இதனையடுத்து செந்தில்குமரின் வீட்டுக்கு சென்று போலீசார் சோதனை நடத்தினர்.
ஏற்கனவே பட்டா வாங்க 3,000 லஞ்சம் வாங்கி கைது
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து செந்தில்குமாரை போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். இறப்பு சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்டு கைதான செந்தில்குமார் ஏற்கனவே லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. கடந்த 2012 ஆம் ஆண்டு கோவில்பட்டியில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்தார். அப்போதும் பட்டா மாற்றம் தொடர்பாக ஒருவரிடம் ரூ.3,000 லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டு இருந்தார்.












Click it and Unblock the Notifications