பாலிடெக்னிக் கல்லூரியில் 16 வயது மாணவியின் முகத்தில் மயக்க ஸ்பிரே அடித்து பலாத்காரம்.. ஊழியர் கைது
வேலூர்: பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கும் 16 வயது மாணவியை மயக்க மருந்து தெளித்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கல்லூரியில் பணிபுரிந்த நிர்வாக அலுவலர் பிரதாப் கைது செய்யப்பட்டார்.
வேலூர் மாவட்டம், லப்பை கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தொழிலாளி செல்வகுமார். இவருக்கு ஒரு கால் உடைந்துவிட்டதால் இவரது மனைவி சயிதா பீடி சுற்றி குடும்பத்தை காப்பாற்றி வருகின்றார். இவரது இரண்டு மகள்களும் இறையன் காடு அருகேயுள்ள அன்னை பாலிடெக்னிக் என்ற தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்று வருகின்றனர்.
இரண்டாம் ஆண்டு படித்து வரும் செல்வக்குமாரின் 16 வயது மகளை கடந்த பிப்ரவரி மாதம் ரெக்கார்ட் நோட் எடுத்து செல்ல வேண்டும். எனவே கல்லூரிக்கு வா என அங்கு பணிபுரியும் நிர்வாக அலுவலர் பிரதாப் என்பவர் அழைத்துள்ளார்.
அந்த மாணவி நோட்டை எடுக்க அறையினுள் சென்றவுடன் முகத்தில் மயக்க ஸ்பிரே மருந்தை தெளித்துள்ளார்.

கல்லூரி அறை
இதில் மயங்கி விழுந்த மாணவியை பிரதாப் கல்லூரியின் உள்ளே அவரின் அறையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் மயக்கம் தெளிந்து மாணவி எழுந்தவுடன் "பாலியல் விவகாரம் யாருக்கும் தெரிய கூடாது. அவ்வாறு தெரிந்தால் நீயும் உனது அக்காவும் இந்த கல்லூரியில் படிக்க முடியாது.

அச்சம்
அத்துடன் என் செல்வாக்கால் உங்களை அழித்துவிடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன மாணவி வீட்டிலும் சொல்லவில்லை, வெளியில் யாரிடமும் சொல்லவில்லை. இந்த நிலையில் திடீரென கர்ப்பமான மாணவியிடம் பெற்றோர் இதுகுறித்து விசாரணை நடத்திய போது அச்சத்தால் அதுகுறித்து எதையும் கூறாமல் இருந்துவிட்டார்.

சமூகநலத் துறை
இதையடுத்து மாணவியை அவரது பெற்றோர் அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்று சோதனை செய்த போது மாணவி 7 மாதங்கள் கர்ப்பமாக உள்ளதை மருத்துவர்கள் தெரிவித்தார்கள். இந்த விவகாரம் குறித்து தகவலறிந்த சமூக நலத்துறையினர் மாணவியிடம் தனியாக அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணை
அவர் அவர் படிக்கும் பாலிடெக்னிக் கல்லூரியிலேயே நிர்வாக அலுவலராக உள்ள பிரதாப்தான் தன் மீது மயக்க மருந்து ஸ்பிரே அடித்து பாலியல் பலாத்காரம் செய்ததை எடுத்து கூறினார். இதையடுத்து பள்ளிகொண்டா காவல்நிலையத்தில் சமூக நலத்துறையினர் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் பள்ளிகொண்டா காவல்துறையினர் வழக்குபதிவு செய்து பிரதாப்பை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications