பாஜக ‘கிளி’யை கத்தியும் கையுமாக கைது செய்த போலீசார்.. ரௌடி + இளைஞரணி நிர்வாகி.. யார் இந்த சதீஷ்?
வேலூர்: வேலூர் அருகே கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட பாஜக இளைஞரணி மாவட்டத் தலைவர் ரவுடி கிளி என்கிற சதீஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
வேலூர் பள்ளிகொண்டா பகுதியை அடுத்த கந்தனேரியில் நெடுஞ்சாலையில் இளைஞர் ஒருவர் கத்தியைக் காட்டி பணம் பறிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற போலீசார், வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞரை கையும் களவுமாக பிடித்துள்ளனர்.

வெட்டுவாணத்தைச் சேர்ந்த விஜய் என்பவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்ட இளைஞரை மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்டவர் ரவுடி கிளி (எ) சதீஷ் என்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சதீஷ் மீது மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இவர் மீது கொலை, வழிப்பறி என பல்வேறு குற்ற வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் உள்ளன.
ரவுடி கிளி என்ற சதீஷ், வேலூர் பாஜக இளைஞரணி மாவட்டத் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார். வழிப்பறியில் ஈடுபட்ட பாஜக மாவட்ட நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் திருவலம் ரயில் நிலைய ஆலோசனை குழு உறுப்பினராக சதீஷை தெற்கு ரயில்வே நியமனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 2021ஆம் ஆண்டில் இருந்து சரித்திர பதிவேடு குற்றவாளிகள் பட்டியலிலும் கிளி சதீஷ் பெயர் இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த 4ஆம் தேதி தனது பிறந்தநாளை வெகு விமரிசையாகக் கொண்டாடி உள்ளார் கிளி சதீஷ். இவரது பிறந்தநாள் பார்ட்டி விழாவில் குற்றப் பின்னணியுடைய நபர்கள் பலர் கலந்துகொண்டு சதீஷுக்கு ஆளுயுர மாலை போட்டு அசர வைத்துள்ளனர். பிறந்தநாளையொட்டி ரவுடிகள் பங்கேற்ற மது விருந்து நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
கிளி சதீஷ், வழிப்பறி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இதேபோன்ற வழிப்பறி வழக்கில் கிளி சதீஷின் கூட்டாளிகளான மேலும் 2 பேரை விருதம்பட்டு போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர்.
விருதம்பட்டு அருகேயுள்ள தண்டல கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த நவீன்குமார் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் ஆகிய 2 பேரும் கைதாகியுள்ளனர். கிளி சதீஷின் கூட்டாளிகளான இவர்களும் பாஜகவில் பொறுப்பில் உள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications