தமிழகத்தின் அனுமதியின்றி ஒரு பக்கெட் காவிரி நீரை கூட கர்நாடகாவால் நிறுத்த முடியாது! துரைமுருகன்
வேலூர்: தமிழ்நாட்டின் ஒப்புதல் இன்றி காவிரியில் ஒரு பக்கெட் தண்ணீரை கூட கர்நாடகாவால் நிறுத்த முடியாது. கர்நாடக முதல்வர் ஆர்வத்தின் காரணமாக சொல்கிறாரே தவிர, அவர் சொல்வதையெல்லாம் ஆக்கப்பூர்வமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
வேலூர்மாவட்டம், காட்பாடியில் உள்ள இல்லத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மேகதாது விவகாரத்தில் ஒன்றிணைந்து செயல்படுவோம் என கர்நாடகா முதல்வர் டி. கே சிவகுமார் கூறியிருந்தது குறித்து கேட்டதற்கு, "கர்நாடகா முதல்வர் சிவக்குமார் அமைச்சரானதில் இருந்தே மேகதாது அணையை பற்றியே பேசி வருகிறார்.

நாங்கள் கட்டுவோம் என சொல்வதே முடியாது காரியம். இரு மாநிலங்களுக்குள் பாயும் ஆறுகளில் எக்காரணத்தைக் கொண்டும் எந்த ஒரு மாநிலமும் தன்னிச்சையாக அணையை கட்டுவது, நீரை தேக்கி வைப்பது என்பது முடியாத காரியம். எங்கெல்லாம் இரு மாநிலங்களுக்கு இடையில் ஆறு ஓடுகிறது அங்கெல்லாம் பிரச்சனை தான்.
முல்லைப் பெரியாறு, கிருஷ்ணா, காவிரி உள்ளிட்ட ஆறுகளிலும் பிரச்சனை இருக்கிறது. அதனால் தான் முல்லை பெரியாறு அணையை பலப்படுத்துவது, கூடுதல் அணை கட்டுவது கேரளாவில் முடிவெடுக்க முடியாது. நம்மை சார்ந்த ஒரு பிரச்சனை. அதே போன்று தான் காவிரியும். காவிரியில் நாங்கள் அணை கட்டுவோம் என்பதே அபத்தம். அதற்கு வாய்ப்பிருந்தால் இந்நேரம் கட்டியிருப்பார்கள். ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை.
தமிழ்நாட்டின் ஒப்புதல் இன்றி ஒரு பக்கெட் தண்ணீரை கூட அவர்களால் நிறுத்த முடியாது. எப்படியாவது ஒப்புதல் வாங்க வேண்டும் என நினைக்கிறார்கள். அது நம்மிடம் கிடையாது. சட்டப்படியாக நீதிமன்ற உத்தரவும் இல்லை. நீதிபதி சொல்லிவிட்டால் கூட அணையை கட்ட முடியாது. அதற்கான ஆயத்தங்களை எடுக்க வேண்டும்.
முதலில் மத்திய நீர்வள ஆணையத்திற்கு செல்ல வேண்டும், வனத்துறை, சுற்றுச்சூழல் இவ்வளவு பிரச்சனைகளை தாண்டி வர வேண்டும். ஏற்கனவே ஒரு முறை நம்மை கேட்காமல் மத்திய அரசு அனுமதி கொடுத்ததாக கூறி வனத்துறைக்கு அனுப்பினார்கள் அப்போது அனுமதி கொடுக்க முடியாது என அனுப்பி விட்டார்கள்.
தடைக் கற்களைத் தாண்டுவது என்பது சுலபம் அல்ல. அவர் ஆர்வத்தின் காரணமாக சொல்கிறாரே தவிர, இது ஆக்கப்பூர்வமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இதுவரை நீதிமன்றம் போட்ட உத்தரவை கர்நாடகா இதுவரை மதித்து நீர் திறந்துள்ளதா? சட்டம் ஒழுங்கு குறித்து ஆளுநரிடம் மத்திய அரசு அறிக்கை கேட்டுள்ளது என கேட்டதற்கு, ஆளுநரிடம் தானே கேட்டார்கள். என்னிடம் இல்லையே என துரைமுருகன் கலகலப்பாக தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications
