குஷ்புவுக்கே கோவில் கட்டிய போது எம்.ஜி.ஆருக்கு கோவில் கட்டுவதில் தவறில்லை! பாசம் மாறாத துரைமுருகன்!
வேலூர்: தமிழகத்தில் குஷ்புவுக்கே கோவில் கட்டிய போது எம்.ஜி.ஆருக்கு கோவில் கட்டுவதில் என்ன தவறிருக்கிறது என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கேட்டிருக்கிறார்.
மேலும், ஜனாதிபதி தேர்தலில் தாம் சத்தியமாக போட்டியிடவில்லை என்றும் யாருக்கு திமுகவின் ஆதரவு என்பதை தெரிவிக்க இன்னும் நாட்கள் இருக்கிறது எனவும் கூறியிருக்கிறார்.
துரைமுருகனின் கல்லூரி காலத்தில் அவருக்கு நிறைய உதவிகளை செய்தவர் எம்.ஜி.ஆர். என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

துரைமுருகன் பேச்சு
வேலூரில் காவல்துறை கண்காணிப்பு அறையை திறந்து வைத்த அமைச்சர் துரைமுருகன், அங்கு நின்று கொண்டிருந்த காவல்துறையினருக்கு ஒரு புதிய அறிவுறுத்தலை கொடுத்தார். அதாவது, ஹெல்மெட் அணியாமல் சென்றால் அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுங்கள் என்றும் எனக்கு அவரைத் தெரியும், இவரைத் தெரியும் என யார் கூறினாலும் அவர்களை விட்டுவிட வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார். ஏனென்றால் இது உயிர் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் உரிய பாதுகாப்பு விதிமுறைகளை எல்லோரும் கடைபிடிக்க முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

ஜனாதிபதி தேர்தல்
ஜனாதிபதி தேர்தல் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, தனக்கே உரிய நகைச்சுவை நயத்துடன் ''சத்தியமா நான் குடியரசுத் தலைவர் வேட்பாளர் கிடையாதுங்க, நான் போட்டியிடவில்லை'' எனக் கூறிவிட்டு திமுக யாருக்கு தெரிவிக்கும் யாரை முன்னிறுத்தும் என்பதை தெரிவிக்க இன்னும் காலம் இருப்பதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். மேலும், குடியரசுத் தலைவர் யார் என்பதை தீர்மாணிக்கும் சக்தியாக கருணாநிதி திகழ்ந்தார் என்றும் அது ஒரு காலம் எனவும் தனது பேட்டியில் குறிப்பிட்டார்.

எம்.ஜி.ஆருக்கு கோவில்
காட்பாடியால் தனி ஒருவர் எம்.ஜி.ஆருக்கு கோயில் கட்டி வருகிறாரே, அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், ''ஏங்க தமிழ்நாட்டில் குஷ்புவுக்கு எல்லாம் கோவில் கட்டியிருக்கிற போது எம்.ஜி.ஆருக்கு கோவில் கட்டுவதில் என்ன தவறிருக்கிறது'' என வினவினார். எம்.ஜி.ஆருக்கு கோவில் கட்டுவதில் தவறில்லை என வரவேற்றார். துரைமுருகனின் கல்லூரி நாட்களில் எம்.ஜி.ஆர். அவருக்கு ஏராளமான உதவிகளை செய்திருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.

அதிமுக சித்தாந்தம்
சித்தாந்தமே இல்லாத கட்சியாக அதிமுக மாறிவிட்டது என்றும் திமுக மட்டும் தாம் திராவிட சித்தாந்தத்தை கொண்டிருக்கிறது எனவும் பெருமிதம் தெரிவித்தார். இதனிடையே பேட்டியின் போது அவ்வப்போது அங்கு நின்று கொண்டிருந்த கட்சிக்காரர்களை கலாய்க்கும் விதமாக அவருக்கே உரிய பாணியில் கலாய்த்து குலுங்கி குலுங்கி துரைமுருகன் சிரித்தார்.












Click it and Unblock the Notifications