ரத்தம் கொதிச்சு போச்சு.. நாங்க தீய சக்தினால விஜய் பேசமாட்டாரு! தன் ஸ்டைலில் கலாய்த்த துரைமுருகன்!
வேலூர்: மேகதாது அணை விவகாரத்தில் மத்திய நீர் வளத்துறை இணை அமைச்சர், அன்புமணி ராமதாஸின் கேள்விக்கு பதில் அளித்தது அதிர்ச்சிக்குரிய செயல், மேகதாது அணை விவகாரத்தில் தமிழக முதல்வர் கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்துவது பெரும் ஆபத்தானது எனவும், தமிழக முதல்வர் இந்த விவகாரத்தில் அனைத்து கட்சியினருடன் மத்திய அரசை அனுக வேண்டும் என முன்னாள் நீர்வளத்துறை அமைச்சரும் திமுக பொதுசெயலாளருமான துரைமுருகன் கூறியுள்ளார்..
வேலூர் மாவட்டம்,காட்பாடியில் தனது இல்லத்தில் திமுக பொதுசெயலாளரும் முன்னாள் தமிழக நீர் வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்," மேகதாது அணை விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் நீர்வளதுறையிடம் கேள்விகளை கேட்டார். அதற்கு நீர் வளத்துறை இணை அமைச்சர் அளித்த பதிலை கண்டு எனக்கு அதிர்ச்சியானது.

காரணம் உச்சநீதிமன்ற தீர்ப்பு காவிரியின் கடை மடை மாநிலங்களான தமிழ்நாடு, பாண்டிச்சேரியிடம், ஆலோசிக்காமல்,எந்த நீர்தேக்கத்தையும் அமைக்க முடியாது என திட்டவட்டமாக தீர்ப்பளித்துள்ளது. ஆனால் வேண்டுமென்றே மத்திய நீர் வளத்துறை இணை அமைச்சர் அப்படி எந்த தடையும் ஆலோசனையும் பெற வேண்டும் என்று நீதிமன்ற தீர்ப்பில் இல்லை என கூறுவது அபத்தமானது.
துரைமுருகன்
ஒரு மத்திய அமைச்சருக்கு இது கூடவா தெரியாமல் போய்விடும். எனவே தமிழக அரசு மேகதாது அணை விவகாரத்தில் உடனடியாக தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சியினரையும் கூட்டி அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தி டெல்லியில் உள்ள நீர் வளத்துறை அமைச்சரையும் பிரதமரையும் சந்திக்க வேண்டும். தமிழக முதல்வர் கர்நாடகா சென்று மேகதாது அணை குறித்து பேச்சுவார்த்தை நடத்துவது பெரும் ஆபத்தை உருவாக்கும். நீதிமன்ற தீர்ப்பு நமக்கு சாதமாக இருக்கும் போது நாம் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்த கூடாது.
மேகதாது அணை
கர்நாடகாவில் மேகதாது அணை காவிரி நீர் பிரச்சணையில் எல்லா கட்சிகளும் ஒன்று பட்டு நிற்கின்றனர். அதே போல் தமிழகத்திலும் கட்சிகள் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். ஏற்கனவே கடை மடை எல்லாம் காய்ந்து பயிர்கள் கருகி போய் உள்ளன. காவிரியில் அவர்கள் தண்ணீர் திறக்க மறுக்கிறார்கள் இந்த நிலையில் மத்திய அமைச்சர் இவ்வாறு கூறியிருப்பதை கர்நாடகா தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திகொள்ளும். எனவே சட்டவல்லுநர்களையும் தமிழக அரசு கலந்தாலோசிக்க வேண்டும்.
அனைத்து கட்சி கூட்டம்
திமுக ஆட்சியில் இருந்த போதெல்லாம் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி டெல்லி சென்றோம். அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா கூட இதற்காக உண்ணாவிரதம் இருந்தார். தமிழக அரசு இந்த விவகாரத்தில் கொந்தளிக்க வேண்டிய தமிழக அரசு அமைதியாக உள்ளது. மேகதாது விவகாரத்தை காரணம் காட்டி கர்நாடகாவில் கன்னடர்கள் இன்று போராட்டம் அங்குள்ள தமிழர்கள் நிலை என்ன ஆகும் என தெரியவில்லை. நீர் வளத்துறையை நான் கவனித்து வந்தேன் என்பதால் பொறுக்க முடியாமல் உங்களை சந்தித்து இதனை கூறுகிறேன்.
தீய சக்தி
சட்டபூர்வமாக பெற்ற உரிமை பறிபோய்விடுமோ என்ற நிலை உள்ளது. முதல்வரோ இந்த விவகாரத்தில் எல்லோரிடமும் ஆலோசனை கேட்பதாக கூறுகிறார். ஆனால் எங்களிடம் கேட்கவில்லை. நாங்கள் தீய சக்தி என்பதால் கேட்கவில்லை போலும். இனியும் காலதாமதம் செய்தால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறும் மத்திய சர்காருடன் ஒத்து போகிறேன் என தமிழக முதல்வர் சொல்கிறார். அப்போது இந்த மேகதாது விவகாரத்தை மத்திய அரசுடன் தமிழக முதல்வர் பேச வேண்டியது தானே..
மத்திய நீர் வளத்துறை
இது கட்சி பிரச்சனைஅல்ல. ஒட்டுமொத்தமாக் எல்லா கட்சி நண்பர்களுடன் ஒருங்கிணைந்து உழைக்க வேண்டும். தமிழகத்தை திசை திருப்ப தான் மத்திய அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். மத்திய நீர் வளத்துறை இணை அமைச்சர் கொடுத்த அறிக்கையே தவறு உச்சநீதிமன்ற தீர்ப்பை காட்டி மத்திய இணை அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்வர் அனுபவம் வாய்ந்தவர்களுடன் கலந்தாலோசிப்பதாக கூறியுள்ளார். ஆனால் எங்களை கலந்தாலோசிக்கவில்லை என்னை கலந்தாலோசிக்கவில்லை. நான் தீய சக்தியின் பொதுசெயலாளர் நான் என்னை அழைப்பாரா?" என்றார்.


Click it and Unblock the Notifications
