அடையாளம் தெரியாத வாகனம் மோதி பாதிக்கப்பட்டவர்களுக்கு 2 லட்சம் தரும் அரசு.. எப்படி பெறுவது?
வேலூர்: அடையாளம் தெரியாத வாகனம் மோதி பாதிக்கப்பட்டவர்கள் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் இழப்பீடு பெற்று கொள்ளலாம் என வேலூர் கலெக்டர் சுப்புலெட்சுமி அறிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத வாகனங்கள் மோதி உயிரிழப்புகள் மற்றும் படுகாயம் ஏற்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசாங்கத்தின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தால் 2 லட்சம் வரை இழப்பீடு தரப்படுகிறது. எப்படி பெறலாம் என்பதை பார்ப்போம்.
அடையாளம் தெரியாத வாகனம் மோதி பாதிக்கப்பட்டவர்கள் எப்படி இழப்பீடு பெறுவது என்று தெரியாமல் தவிக்கிறார்கள். என்னதான் இன்சூரன்ஸ் போட்டிருந்தாலும், அடையாளம் தெரியாத வாகனம் என்றால், எப்ஐஆர் போட்டு அதற்கு இழப்பீடு பெறுவதற்குள் மக்கள் நொந்துவிடுவார்கள். இவர்களுக்காகவே மத்திய அரசு கடந்த 2022ம் ஆண்டு சட்டமே கொண்டு வந்தது. இதன்படி சாலைகளில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறப்பவர்களின் வாரிசுகள் அல்லது காயம் அடைந்தவர்கள் இழப்பீடு பெற முடியும். இதற்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

இது தொடர்பாக வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலட்சுமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வேலூர் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத வாகனங்கள் மோதி உயிரிழப்புகள் மற்றும் படுகாயம் ஏற்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசாங்கத்தின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தால் 2022-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டுள்ள சட்டத்தின்படி இழப்பீடு வழங்கப்படுகிறது.
கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதிக்கு பின்னர் நிகழ்ந்த விபத்துக்களில் இறப்பு ஏற்பட்ட நபரின் வாரிசுகளுக்கு ரூ.2 லட்சம், படுகாயம் ஏற்பட்ட நபருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடாக வழங்கப்படுகிறது.
எனவே அடையாளம் தெரியாத வாகன விபத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் விண்ணப்பங்களை வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அல்லது சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் பெற்றுக்கொண்டு வங்கி கணக்கு புத்தக நகல், சிகிச்சை மேற்கொண்டதற்கான ரசீது நகல், பாதிக்கப்பட்டவரின் அடையாளம் மற்றும் முகவரி ஆதார அட்டையின் நகல், வாரிசுதாரரின் அடையாளம் மற்றும் முகவரி ஆதார அட்டையின் நகல், போலீஸ் முதல் தகவல் அறிக்கையின் நகல், பிரேத பரிசோதனை அறிக்கை நகல் (இறப்பு ஏற்பட்டிருப்பின்), இறப்பு சான்று அல்லது காயம் ஏற்பட்டதற்கான அறிக்கை, வாரிசு சான்று (இறப்பு நிகழ்வில் மட்டும்) ஆகியவற்றை வேலூர் மற்றும் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பித்து இழப்பீடு பெற்று கொள்ளலாம்" இந்த தகவலை வேலூர் கலெக்டர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications