குடும்ப அட்டை வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. வீட்டிற்கே வரும் ரேஷன் கடை ஊழியர்கள்
வேலூர்: வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் (ஏ.ஏ.ஒய்., பி.எச்.எச்.) குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் விற்பனை முனைய எந்திரத்தில் கைரேகை மூலம் ஆதார் பதிவு செய்ய வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.இந்த பணியை இத்தனை நாட்களாக கடையில் செய்து வந்த ரேஷன் கடை பணியாளர்கள், தற்போது வீடுகளுக்கே சென்று கைரேகை பதிவு செய்கிறார்கள். வேலூர் மாவட்டத்தில் இந்த பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.
ரேஷன் கார்டு வைத்துள்ள குடும்பத்தினர் அனைவரும் கைரேகை பதிவு செய்ய வேண்டியது அவசியம். கைரேகை பதிவு செய்யாவிட்டால், அவர்களால் ரேஷனில் பொருட்கள் பெற இயலாது. யாருடைய கைரேகை உள்ளதோ அவர்கள் மட்டுமே ரேஷன் கார்டுடன் வந்து பொருட்களை பெற முடியும் என்கிற நிலை உள்ளது.

இந்நிலையில் முறைகேடுகளை தடுப்பதற்காக, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் (ஏ.ஏ.ஒய்., பி.எச்.எச்.) குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் விற்பனை முனைய எந்திரத்தில் கைரேகை மூலம் ஆதார் பதிவு செய்ய வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. இதற்கான பணிகளை முழு வீச்சில் ரேஷன் கடை பணியாளர்கள் தமிழகம் முழுவதும் மேற்கொண்டு வருகிறார்கள்.
அந்த வகையில் வேலூர் மாவட்டத்தில் குடும்ப அட்டைதார்களிடம் கைரேகை பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது. தற்போது வரை வேலூர் மாவட்டத்தில் 86 சதவீதம் குடும்ப அட்டைதாரர்கள் மட்டுமே கைரேகை அல்லது கருவிழி மூலம் பதிவு செய்திருக்கிறார்கள். மீதம் உள்ளவர்கள் பதிவு செய்யாமல் உள்ள நிலையில், அவர்கள் வருகிற 30-ந் தேதிக்குள் ரேஷன் கடையை அணுகி கைரேகை அல்லது கருவிழி மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் பிற மாவட்டங்களில் வேலை நிமித்தமாக தங்கியிருந்தால் அங்குள்ள ரேஷன்கடைக்கு சென்று கைரேகை மூலம் ஆதார் எண்ணை பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அரசு அறிவித்துள்ளது. இதனிடையே மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், நோயாளிகள் மற்றும் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு வீட்டிற்கே சென்று கைரேகை பதிவு செய்யும் சிறப்பு திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. அதன்படி ரேஷன் கடை பணியாளர்கள் அவர்களின் வீடுகளுக்கே சென்று கைரேகை பதிவு செய்து வருகின்றனர்.
தற்போது வேலூர் மாவட்டத்தில் இந்த பணி தீவிரமாக நடந்து வருகிறது. ரேஷன் கடை ஊழியர்கள் வீடுகளுக்கே சென்று பதிவு செய்ய செல்லும் நிலையில், நடைமுறையில் சில சிக்கல்களை அவர்கள் எதிர்கொண்டு வருகிறார்கள். ஏனெனில் ரேஷன் அட்டையில் உள்ள முகவரிக்கு பதிவு செய்ய சென்றால் அவர்கள் அந்த வீட்டில் வசிப்பதில்லை. அவர்கள் வேறு ஒரு இடத்துக்கு மாறி வசிப்பது நடக்கிறது. அவர்கள் புதிய முகவரியை அப்டேட் செய்யாமல் விடுவதால் பணியாளர்கள் முகவரி தெரியாமல் தவித்து போய் இருக்கிறார்கள். பல்வேறு சிரமங்களுக்கு நடுவிலும் ரேஷன் கடை பணியாளர்கள் கைரேகை பதிவு செய்து வருகிறார்கள். இன்னும் பதிவு செய்யாதவர்கள் பதிவு செய்யலாம் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications