வெலவெலத்துப் போனதே வேலூர்! கர்ப்பிணியை தள்ளி விட்ட சைக்கோ! ஏற்கனவே இத்தனை வழக்கா? பகீர் பின்னணி!
வேலூர்: வேலூர் அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண் பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு உள்ளாக்கப்பட்டதோடு ரயிலில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்ட சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கும் நபர் மீது ஏற்கனவே கொலை, பாலியல் வன்கொடுமை செய்த வழக்குகள் இருப்பதாகவும், அடிக்கடி சிறைக்குச் சென்று வந்த அவர் அதே செயலில் மீண்டும் மீண்டும் ஈடுபட்டு வந்ததும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணியாற்றி வந்திருக்கிறார். தற்போது நான்கு மாத கர்ப்பிணியாக இருக்கும் அவர் தனது சொந்த ஊர் செல்வதற்காக நேற்று கோயம்புத்தூரில் இருந்து திருப்பதி செல்லும் இண்டர் சிட்டி விரைவு ரயிலில் பயணம் மேற்கொண்டு இருக்கிறார்.

நள்ளிரவில் இயற்கை உபாதை கழிக்க கழிவறைக்குச் சென்றபோது அங்கு அந்த பெண்ணுக்கு ஒரு இளைஞர் பாலியல் வன்கொடுமை கொடுத்திருக்கிறார். இதனால் அந்த கர்ப்பிணி சத்தம் போட்டதால் கோபமடைந்த அந்த நபர் கர்ப்பிணி என்றும் பாராமல் அந்த பெண்ணை வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே ரயிலிலிருந்து கீழே தள்ளி விட்டு சென்றதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அந்த நபர் காட்பாடி வந்ததும் ரயிலில் இருந்து இறங்கி தப்பி சென்றிருக்கிறார்.
படுகாயம் அடைந்த அந்தப் பெண் குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் அந்த பெண்ணை மீட்ட காவல்துறையினர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் அந்த பெண் கூறிய அடையாளங்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
மேலும் ரயில்களில் குற்றங்கள் செய்யும் குற்றவாளிகள் தொடர்பான புகைப்படங்களை போலீசார் காண்பித்த போது குற்றச் செயலில் ஈடுபட்ட இளைஞர் குறித்து அந்த பெண் அடையாளம் காட்டினார். இதை அடுத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார் கேவி குப்பம் அருகே ஹேமராஜ் என்பவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் இந்த சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் தற்போது இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர் மீது ஏற்கனவே பல பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்திருக்கிறது.
மேலும் செயின் பறிப்பு உள்ளிட்ட சம்பவங்களிலும் அந்த நபர் ஈடுபட்டுள்ளார். இந்த நபர் மீது செயின் பறிப்பு, பாலியல் தொல்லை, கொலை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இளம்பெண்ணை தனியாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக வழக்கு இருக்கிறது. இதேபோல 2022 ஆம் ஆண்டு காட்பாடி ரயில் நிலையத்தில் செயின் பறிப்பு முயற்சியின் போது பெண்ணை ரயிலில் இருந்து கீழே தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. சிறையில் இருந்து வெளிவந்தவுடன் அதே குற்றத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் பெண்களை கொடூரமாக தாக்குவது, ரயிலில் இருந்து தள்ளி விடுவது என ஏற்கனவே பல சம்பவங்களில் அவர் ஈடுபட்டுள்ளதாகவும் போலீசார் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications