ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி! சிக்கிய பாலியல் சைக்கோ..இடது காலில் மாவு கட்டு போட்ட போலீஸ்
வேலூர்: வேலூரில் ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த 4 மாத கர்ப்பிணி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டதோடு குற்றவாளியால் தள்ளிவிடப்பட்ட சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் போலீசார். இதற்கிடையே இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணியாற்றி வந்திருக்கிறார். தற்போது நான்கு மாத கர்ப்பிணியாக இருக்கும் அவர் தனது சொந்த ஊர் செல்வதற்காக நேற்று கோயம்புத்தூரில் இருந்து திருப்பதி செல்லும் இண்டர் சிட்டி விரைவு ரயில் பயணம் மேற்கொண்டு இருக்கிறார்.

நள்ளிரவில் இயற்கை உபாதை கழிக்க கழிவறைக்குச் சென்றபோது அங்கு அந்த பெண்ணுக்கு ஒரு இளைஞர் பாலியல் வன்கொடுமை கொடுத்திருக்கிறார். இதனால் அந்த கர்ப்பிணி சத்தம் போட்டதால் கோபமடைந்த அந்த நபர் கர்ப்பிணி என்றும் பாராமல் அந்த பெண்ணை வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே ரயிலிலிருந்து கீழே தள்ளி விட்டு சென்றதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அந்த நபர் காட்பாடி வந்ததும் ரயிலில் இருந்து இறங்கி தப்பி சென்றிருக்கிறார்.
படுகாயம் அடைந்த அந்தப் பெண் குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் அந்த பெண்ணை மீட்ட காவல்துறையினர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் அந்த பெண் கூறிய அடையாளங்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
மேலும் ரயில்களில் குற்றங்கள் செய்யும் குற்றவாளிகள் தொடர்பான புகைப்படங்களை போலீசார் காண்பித்த போது குற்றச் செயலில் ஈடுபட்ட இளைஞர் குறித்து அந்த பெண் அடையாளம் காட்டினார். இதை அடுத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார் கேவி குப்பம் அருகே ஹேமராஜ் என்பவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் இந்த சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் தற்போது இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர் மீது ஏற்கனவே பல பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்திருக்கிறது.
இந்த நிலையில் இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபரை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது அந்த நபர் போலீசாரிடம் இருந்து தப்பி ஓட முயற்சித்த போது கால் தடுக்கி அருகில் உள்ள பள்ளத்தில் விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் அவரை திருப்பத்தூர் மருத்துவமனையில் போலீசார் அனுமதித்துள்ளனர். அவருக்கு இடது காலில் மாவு கட்டு போடப்பட்டுள்ளது. தொடர்ந்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அவர் உடல் நலம் சீராக இருப்பதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர். காயமடைந்த கர்ப்பிணிக்கு ரயில்வே நிர்வாகத்தின் சார்பில் 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் எனவும், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளி 12 மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்டு இருப்பதாக தென்னக ரயில்வே கூறி உள்ளது.












Click it and Unblock the Notifications