ராணிப்பேட்டை கவியரசு.. கண்ணிமைக்கும் நேரத்தில் செய்த கொடூரம்! பெண் பிள்ளையை பெற்றால் அழுவுனுமா?
வேலூர்: ராணிப்பேட்டையில் கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து ஏற்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஒருதலை காதலை ஏற்காததால் இளைஞர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டிருக்கிறார். இது தொடர்பாக கவியரசு எனும் இளைஞரை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.
ஆற்காடு கலவை பகுதியை சேர்ந்தவர் விவசாயி ஜெயவேல். இவரது மகள் கிருதிகா விளாப்பாகத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார். கலவை கிராமத்தில் இருப்பவர்கள் உயர் கல்வியை பெற ஆற்காடு, ராணிப்பேட்டை, வேலூருக்குதான் வர வேண்டும். அப்படித்தான் தனது மகளையும் ஆற்காடு அருகே உள்ள விளாப்பாக்கத்தில் ஆற்காடு படிக்க வைத்திருக்கிறார்.

இந்நிலையில், கிருதிகாவை கடந்த மூன்று ஆண்டுகளாக கவியரசு எனும் இளைஞர் பின் தொடர்ந்து, காதலிப்பதாக கூறி தொந்தரவு செய்திருக்கிறார். இது குறித்து தனது தோழிகளிடம் கிருதிகா கூறியிருக்கிறார். இருப்பினும் போலீஸ், வழக்கு என சென்றால் படிக்க வந்த இடத்தில் பிரச்சனையாகிவிடும் என தவறாக கருதிக்கொண்டு அமைதியாக இருந்திருக்கிறார்.
இப்படி இருக்கையில்தான் நேற்று மாலை அந்த கொடூர சம்பவம் நடந்திருக்கிறது. தந்தை ஜெயவேல் தனது மகளை அழைத்துக்கொண்டு கல்லூரியிலிருந்து வீட்டிற்கு புறப்பட்டிருக்கிறார். இவர்களை இடையில் வழிமறித்த 21 வயது இளைஞன், கிருதிகா மீது கத்தியால் தாக்குதல் நடத்தியிருக்கிறார். தாக்குதலில் நிலை குலைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்த இளம்பெண்ணை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். இளைஞன் கத்தியால் குத்தியதில் கிருத்திகாவுக்கு கழுத்து, மார்பு உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டிருக்கிறது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக இந்த கொடூர செயலில் ஈடுபட்ட இளைஞரை பிடிக்க தனிப்படையை அமைத்தனர். அடுத்த சில மணி நேரங்களில் அவர்கள் அகரம் கிராமத்தை சேர்ந்த கவிஞயரசு எனும் இளைஞரை கைது செய்திருக்கின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளாக இளம்பெண் பின்னால் சுற்றி காதலை கூறி தொந்தரவு செய்ததாகவும், காதலை ஏற்காததால் இளைஞர் வெறி கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், எனவே அவரை கைது செய்திருப்பதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.
இது குறித்து வாழப்பந்தல் காவல் நிலைய போலீசார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். தந்தை கண் முன்னே மகள் கத்தி குத்துக்கு உள்ளாகியுள்ள சம்பவம் ராணிப்பேட்டையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ராணிப்பேட்டை மாவட்டம் சமீப நாட்களாக பெண்களுக்கு எதிரான குற்றம் நிறைந்த மாவட்டமாக உருமாறி வருகிறதோ? என்கிற கேள்வியை பல்வேறு தரப்பினரும் எழுப்பி வருகின்றனர். இதற்கு முன்னர் கூட இம்மாவட்டத்தில் மாணவிகள் மீது கத்தி குத்து சம்பவங்கள் நடந்திருக்கின்றன.
கடந்த மே மாதம் 28ம் தேதி ராணிப்பேட்டை மாவட்டத்தில் வீடு புகுந்து 15 வயது பள்ளி மாணவி ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்டார். சோளிங்கரை அடுத்த புலிவலம் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்திருந்தது. தனது காதலை ஏற்காததால் இளைஞர் ஒருவர் இந்த கொடூர செயலில் ஈடுபட்டிருந்தார். இதில் சோகம் என்னவெனில், கத்தி குத்து நடந்தபோது, அதை தடுக்க பள்ளி மாணவியின் தோழி முயன்றிருந்தார். அவருக்கும் சரமாரியாக வெட்டு காயங்கள் ஏற்பட்டிருந்தது.
இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடக்காமல் இருக்க வேண்டும் என்றும் அதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications