ஜோலார்பேட்டையில் ஷாக்! 64 வயது மூதாட்டியின்.. வாயை கடித்து துப்பிய இளைஞர்!
திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த மூதாட்டியின் உதட்டை இளைஞர் ஒருவர் கடித்து துப்பியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞரை அக்கம் பக்கத்தினர் பிடித்து போலீசிடம் ஒப்படைத்துள்ளனர்.
வட தமிழகத்தில் மிகவும் பரபரப்பான ரயில் நிலையங்களில் ஒன்றுதான் ஜோலார்பேட்டை. தமிழகத்தின் எக்சிட் பாயின்ட்டாகவும், மேற்கு மாவட்டங்களிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களுக்கு இந்த ரயில் நிலையம் என்ட்ரி பாயிண்டாகவும் இருக்கிறது. எனவே எப்போதும் பயணிகள் கூட்டம் இருக்கும்.

இன்று காலையும் இப்படித்தான் ரயில் நிலையம் பரபரப்பாக இயங்கி வந்திருக்கிறது. ரயில்களுக்கு காத்திருந்த நூற்றுக்கணக்கான பயணிகளில், 64 வயது மூதாட்டி ஜெயசுந்தரியும் ஒருவர். இவர் சமோசா தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் ரயிலுக்காக காத்திருந்த நேரத்தில், திடீரென இளைஞர் ஒருவர் பாய்ந்து வந்து ஜெயசுந்தரியை கட்டிப்பிடித்து, வாயை பிடித்து கடித்திருக்கிறார். இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த ஜெயசுந்தரி உதவிக்காக அலறியுள்ளார்.
உடனே அக்கம் பக்கத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் வந்து, ஜெயசுந்தரிக்கு உதவியுள்ளனர். அதேநேரம் இந்த செயலில் ஈடுபட்ட இளைஞரை பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.
ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையை மேற்கொண்டு, இளைஞரை பிடித்து சென்றுள்ளனர். இளைஞருக்கும் காயம் அதிகமாக இருந்தால் அவரை அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அப்போது இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட ஜெயசுந்தரிக்கு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டடிருக்கிறது. இதனையடுத்து மேல்சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்.
மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காக மறுவாழ்வு மையத்தை தொடங்கி, அதில் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்று மனித உரிமை அமைப்புகள் நீண்ட நாட்களாக கோரி வருகின்றன. பெயரளவுக்கு மட்டுமே மனநலம் மருத்துவ மையங்கள் இயங்குவதாகவும், போதிய நிதி இல்லாததால் மருந்துகள், மருத்துவர்களுக்கும் தட்டுப்பாடு இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications