விவசாயிகளுக்கு அக்கவுண்டிலேயே வந்து விழப்போகும் 15000 ரூபாய்.. விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு
வேலூர்: புதிய மின் மோட்டார் பம்புசெட்டுகளை வாங்க விவசாயிகளுக்கு ரூ.15 ஆயிரம் அல்லது மின்மோட்டார் பம்புசெட் மொத்த விலையில் 50 சதவீதம் இவற்றுள் எது குறைவோ அத்தொகை மானியமாக அரசு வழங்க உள்ளது. எனவே மானியத்தில் மின்மோட்டார் பம்புசெட்டுகள் பெற விருப்பமுள்ள விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என வேலூர் கலெக்டர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார். இந்த 15000 மானியத்தை பெற யாருக்கு எல்லாம் தகுதி உள்ளது என்பதை பார்ப்போம்.
விவசாயிகளுக்கு விதை மானியம், உர மானியம், ஆண்டுக்கு 6000 உதவி தொகை, பயிர்க்காப்பீடு என பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்படுகிறது. மேலும் விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. விவசாயம் சார்ந்த தொழில்களை செய்யவும் மானியத்துடன் கடன் உதவி வழங்கப்படுகிறது. அதேபோல் வேளாண் இயந்திரங்கள் வாங்க விவசாயிகளுக்கு 50% மானியம் வழங்கப்படுகிறது. பெண் விவசாயிகளுக்கும் 50% மானியம் வழங்கப்படுகிறது. ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு கூடுதலாக 20% அதிகமான மானியம் வழங்கப்படுகிறது. இதர விவசாயிகளுக்கு 40% மானியம் அரசால் வழங்கப்படுகிறது. இதேபோல் புதிய மின் மோட்டார் பம்புசெட்டுகளை வாங்க விவசாயிகளுக்கு ரூ.15 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. இதற்கு தகுதி உள்ள விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என வேலூர் கலெக்டர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- "பழைய திறன் குறைந்த பம்புசெட்டுகளை மாற்றி அமைக்க முடியாத நிலையில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு புதிய மின் மோட்டார் பம்புசெட்டுகள் வாங்குவதற்கு மானியம் வழங்கப்படுகிறது. எனவே புதிய கிணறுகளை உருவாக்கும் விவசாயிகளுக்கும், திறன்குறைந்த பழைய மின் மோட்டார் பம்புசெட்டுகளை மாற்ற விரும்பும் விவசாயிகளுக்கும் புதிதாக மின் மோட்டார் பம்புசெட்டுகள் வாங்குவதற்கு மானியம் வழங்கப்படுகிறது.
புதிய மின் மோட்டார் பம்புசெட்டுகளை வாங்க விவசாயிகளுக்கு ரூ.15 ஆயிரம் அல்லது மின்மோட்டார் பம்புசெட் மொத்த விலையில் 50 சதவீதம் இவற்றுள் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும். இந்த திட்டத்தில் சிறு, குறு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு மற்றும் குறு விவசாயிகள் அனைவரும் தகுதியுடையவர்கள். கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் உள்ள கிராம விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
ஏற்கனவே தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமை மூலம் நுண்ணீர் பாசன அமைப்பு நிறுவியுள்ள விவசாயிகள் மற்றும் தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமை மூலம் நுண்ணீர் பாசன அமைப்பு நிறுவிட விருப்பமுள்ள விவசாயிகள் இத்திட்டத்தில் பயன்பெற தகுதியுடையவர்கள்.
இதில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி மூலமாகவோ அல்லது நுண்ணீர் பாசன மேலாண்மை தகவல் அமைப்பு என்ற இணையதளம் மூலமாகவோ விண்ணப்பித்து, பெயரை முன்பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு ஒன்றியங்களில் உள்ள உதவி வேளாண்மை இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம்" இவ்வாறு வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமி வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications