சூப்பர்! திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை கங்கா கலக்கல் வெற்றி... குவியும் பாராட்டு
வேலூர்: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், வேலூர் மாநகராட்சியின் 37ஆவது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் திருநங்கை கங்கா வெற்றி பெற்றுள்ளார்.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன.
இவற்றில் மொத்தம் 12,285 வார்டுகள் உள்ள நிலையில், உள்ளாட்சி பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கக் கடந்த கடந்த 19-ம் தேதி அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்
சில இடங்களில் மட்டுமே பூசல் ஏற்பட்ட நிலையில், 7 வாக்குச்சாவடிகளில் திங்கள்கிழமை மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் 60% வாக்குகள் பதிவாகி இருந்தது. குறிப்பாகச் சென்னையில் வாக்குப்பதிவு மிகக் குறைவாக இருந்தது. இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் எண்ண்பட்டு தற்போது முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

திமுக வெற்றி
இதுவரை வெளியான முடிவுகளில் பெரும்பாலான இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுமே பெரும்பாலான இடங்களில் வென்றுள்ளன. தமிழகத்தில் மொத்தம் இருக்கும் 21 மாநகராட்சிகளிலும் திமுக கூட்டணியே முன்னிலையில் உள்ளது. நகராட்சிகளைப் பொறுத்தவரை 138 நகராட்சிகளில் 120க்கும் அதிகமான நகராட்சிகளிலும், பேரூராட்சிகளில் 490இல் 360க்கும் அதிகமான பேரூராட்சிகளிலும் திமுக கூட்டணியே வெற்றி பெறும் நிலையில் உள்ளது.

திமுக திருநங்கை வேட்பாளர்
அதில் வேலூர் மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் உள்ள நிலையில், அதில் 37ஆவது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை கங்கா வெற்றி பெற்றுள்ளார். இவர் தனக்கு எதிராகப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரை விட 15 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதையடுத்து திருநங்கை கங்காவுக்கு திமுகவினர் மட்டுமின்றி, பலரும் இணையத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

யார் இந்த கங்கா
49 வயதான திருநங்கை கங்கா, வேலூர் மாவட்டம் வேலூர் ஓல்டு டவுன் பகுதியைச் சேர்ந்தவர். இவர் கடந்த 2002ஆம் ஆண்டு முதல் திமுக உறுப்பினராக இருந்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காலத்தில் கங்கா அப்பகுதியில் உள்ள மக்களுக்கு அரிசி,பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களைக் கொடுத்து உதவியுள்ளார். இதனால் அவருக்கு அப்பகுதியில் நல்ல வரவேற்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த முறை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக மட்டுமின்றி, அதிமுக பாஜக சார்பிலும் திருநங்கை வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications