தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களில் வரி முறைகேடு.. பாஜக அதிரடியாக தந்த புகார்
வேலூர்: பொதுவாக அரசின் டாஸ்மாக் நிறுவனம் மதுபானக் கடைகளை நேரடியாக நடத்துகிறது. ஆனால், அதனுடன் இணைக்கப்பட்டுள்ள பார்கள் டெண்டர் முறையில் தனியார் நபர்களுக்கு ஏலம் மூலம் குத்தகைக்கு விடப்படுவது வழக்கம். அதில் வரி முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் உள்ளன. இந்த சூழலில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களில் வரி முறைகேடு நடைபெறுவதாக பாஜகவினர் வேலூர் வணிகவரித்துறையில் புகார் அளித்துள்ளனர்.
வேலூரில் கோட்டை சுற்றுசாலையில் உள்ள வணிவரித்துறை துணை ஆணையர் அலுவலகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் பிரச்சார பிரிவு மாநில செயலாளர் எஸ்.கே மோகன் நிர்வாகிகள் வெங்கடேசன், சிவராமன் உள்ளிட்டோர் மனு அளித்தனர்.

அந்த மனுவில் "தமிழகம் முழுவதும் அரசு மதுபானகடைகளில் பார்கள் உரிமம் முடிந்து இரண்டு மாதங்கள் அரசு நீடிப்பு செய்தது டாஸ்மாக் பார் திறப்பில் உரிய வரியை அரசுக்கு செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்கின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளாக தற்போது வரையில் பார்கள் திறப்பில் ஜி.எஸ்டி வரியை செலுத்தாமல் முறைகேடுகள் நடக்கிறது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது பார்களை டாஸ்மாக் நிர்வாகம் கண்காணிக்காமல் அவர்கள் தேவையானதை பெற்றுக் கொண்டு அமைதியாக விட்டு விடுகின்றனர். இதனால் பல கோடி ரூபாய் அரசுக்கு வரும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. டாஸ்மாக் நிர்வாகத்தில் உள்ளவர்களே அரசு வருவாய்க்கு இழப்பு ஏற்படுத்த உறுதுணையாக இருப்பதாக சந்தேகிக்கிறோம். கடந்த 10 ஆண்டுகளில் அரசுக்கு பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே வணிக வரித்துறையினர் வ்ரிவான ஆய்வு செய்து ஜி.எஸ்டியை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு மனு அளித்தனர்
சாதாரண பெட்டி கடையில் கூட ஜி.எஸ்டி செலுத்தவில்லை என்றால் பாய்ந்து பாய்ந்து நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள் 10 ஆண்டுகளாக அரசு டாஸ்மாக் பார்களில் ஜி.எஸ்டி வரியை வசூலிக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது மர்மமாக உள்ளது. இதில் அரசு அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர். ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை வரி ஏய்ப்பு தொடர்கிறது என்று பாஜகவினர் குற்றம்சாட்டினார்கள்.
டாஸ்மாக் பார்களில் நொறுக்குத் தீனிகள், குடிநீர் பாட்டில்கள், கூல் ட்ரிங்க்ஸ் போன்றவை அதிகம் விற்பனை செய்யப்படுகிறது. இதில் இந்த சிற்றுண்டி விற்பனையில் பெரும்பாலும் வியாபாரம் ரொக்கமாகவே நடக்கும். வாடிக்கையாளர்களுக்கு ஜி.எஸ்.டி எண் கொண்ட முறையான பில் பொதுவாக தருவது கிடையாது. இதனால் நாள் ஒன்றுக்கு எவ்வளவு வியாபாரம் நடக்கிறது என்ற கணக்கை மறைத்து, ஜி.எஸ்.டி வரியை எளிதாக ஏமாற்றுவதாக குற்றச்சாட்டு உள்ளது. அதேபோல் டாஸ்மாக் பார்களில் எம்ஆர்பி விலையை விடக் கூடுதலாக ₹10, ₹20 வைத்து விற்பனை செய்யப்படுவது வழக்கம். ஆனால், அந்த கூடுதல் லாபத்திற்கு எந்தவிதக் கணக்கோ, ஜி.எஸ்.டி வரியோ அரசாங்கத்திற்கு போவதே கிடையாது என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
அதேபோல் டாஸ்மாக் கடைகளில் பல இடங்களில் உரிமக் காலாவதியான பின்னர், முறையான அனுமதி பெறாமலேயே சட்டவிரோதமாக பார்கள் நடத்தப்பட்டும் உள்ளதாக குற்றச்சாட்டுகள் உள்ளது. இதன் மூலம் ஏமாற்றுவேலைகள் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications
