செ.கு. தமிழரசன் கிட்டயே "கை" வெச்சுட்டாங்களா? "கை" கழுவினதுமே "கை" நழுவிருச்சு போல.. பரபரத்த வேலூர்
வேலூர்: மூத்த தலைவர் செ.கு. தமிழரசன் வேலூரில் ஒரு புகார் தந்துள்ளார்.. இதுகுறித்து போலீசார் தீவிரமான விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.. என்ன நடந்தது?
தமிழகத்தின் மிகச்சிறந்த அரசியல்வாதியாக கருதப்படுபவர் செ.கு.தமிழரசன்.. அன்றைய அதிமுக ஆட்சி காலத்தில் செல்வாக்குடன் வலம் வந்தவர்.. 80'களின் இறுதியிலிருந்து அரசியல் பயணத்தில் வெற்றி பெற்று வருபவர்.
சபாநாயகர்: மறைந்த ஜெயலலிதா மீது அளவுகடந்த மரியாதை வைத்திருந்தவர் செ.கு.. தமிழரசன்.. அதேபோல, ஜெயலலிதாவும் இவர் மீது தனிப்பட்ட முறையில் பாசமும், நம்பிக்கையும் வைத்திருந்தார்.. அதனால்தான் தற்காலிக சபாநாயகராக தமிழரசனை அன்று உயர்த்தி அழகு பார்த்தார்..

அதுமட்டுமல்ல, எப்போது தேர்தல் நடந்தாலும் சரி, செ.கு. தமிழரசனுக்கென்று ஒரு தொகுதியை ஒதுக்கிவிடுவது ஜெயலலிதாவின் வழக்கமாக இருந்தது.. இந்த நடைமுறை அவர் மறையும்வரை மாறவேயில்லை... ஆனால், ஜெயலலிதா மறைந்தவுடன், கட்சி துண்டாடப்பட்டதுமே, செ.கு. தமிழரசனுக்கு அதிமுக மீதான ஈர்ப்பு மெல்ல குறையவும், அரசியலில் சற்று ஒதுங்கியே இருந்தார்.. பிறகு திடீரென மநீம தலைவர் கமலுடன் கூட்டணி வைத்து, கடந்த 2019 முறை எம்பி தேர்தலை சந்தித்தார்..
கமல்ஹாசன்: அதற்கு பிறகு மறுபடியும் அரசியலில் தீவிர தன்மை இல்லாமல் இருந்தநிலையில், மெல்ல ஒதுங்கியிருக்கிறார். காரணம், தலித் மக்களுக்கு துணைத்தலைவர் பதவிக்கு இடஒதுக்கீடு மற்றும் தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளதால், 18 சதவீத இடஒதுக்கீட்டை உயர்த்தி வழங்கும்படி கோரிக்கை விடுத்தும், திமுக, அதிமுக கட்சிகள் கண்டுகொள்ளவில்லை. இந்த ஆதங்கம் செ.கு. தமிழரசனுக்கு இப்போதும் உள்ளது.
இப்படிப்பட்ட சூழலில், வேலூரில் நடந்த இந்திய குடியரசு கட்சி ஆர்ப்பாட்டத்தில், செ.கு.தமிழரசனின் வைர மோதிரம் திருட்டு போயிருக்கிறது..
செ.கு. தமிழரசன்: நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த அம்பேத்கரின் உருவச்சிலை அகற்றப்பட்டதாக கூறி வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் இந்திய குடியரசு கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது... இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி முன்னாள் எம்எல்ஏவுமான செ.கு.தமிழரசன் தலைமை தாங்கினார்.. இதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டம் முடிந்து அனைவரும் கலைந்து சென்ற நிலையில், இந்திய குடியரசு கட்சி மாநில தலைவர் செ.கு.தமிழரசன் தனது ஆதரவாளர்களுடன் அப்பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் மதியம் சாப்பிட சென்றுள்ளார்.. சாப்பிட்டுவிட்டு கைகளை கழுவ சென்றவர் தன்னுடைய கைவிரலில் அணிந்திருந்த வைர மோதிரம் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
வைர மோதிரம்: ஆர்ப்பாட்டத்திலோ அல்லது ஓட்டலில் உணவருந்த செல்வதற்கு முன்பு கைகளை கழுவும்போதோ வைர மோதிரம் நழுவி விழுந்திருக்கலாம் என்றும் அப்போது அதை யாரோ திருடி சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது..
இதற்கு பிறகு, செ.கு.தமிழரசன் சாப்பிட்ட ஓட்டலிலிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை பார்த்தபோது, யாரோ ஒருவர் சந்தேகப்படும் வகையில் கைகளை கழுவும் இடத்தில் கீழே கிடந்த எதையோ எடுத்து செல்வதும் பதிவகியிருக்கிறது.
பரபரப்பு: இதையடுத்து, வேலூர் தெற்கு போலீசில் செ.கு.தமிழரசன் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமியை தேடி வருகிறார்கள்.. கட்சி தலைவரிடமே வைர மோதிரம் திருடு போயிருப்பது வேலூரில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் தந்துவருகிறது.












Click it and Unblock the Notifications