கருணாநிதி மீது சத்தியம்.. லஞ்சமே வாங்க மாட்டோம்.. திமுக வேட்பாளர்கள் தடாலடி பிரச்சாரம்
வேலூர்: கருணாநிதி மீது ஆணையாக இறைவன் மீது ஆணையாக நாங்கள் யாரிடமும் ஒரு பைசா கூட லஞ்சமாக வாங்க மாட்டோம் என பிரச்சாரத்தில் பொதுமக்கள் முன்னிலையில் திமுக வேட்பாளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடக்க உள்ளது.
இதில் வேலூர் மாவட்டத்திற்கு வரும் 6 ஆம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக இறுதி கட்ட பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாகி ஈடுபட்டு வருகிறார்கள்.

நூதன பிரச்சாரம்
பிரச்சாரத்தில் ஈடுபடுபவர்கள் பல்வேறு நூதன முறையில் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதிலும் வேலூர் மாவட்டம், குடியாத்தம், காட்பாடி பேரணாம்பட்டு, கே வி குப்பம் உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியங்களுக்கான தேர்தல் பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் குடியாத்தம் ஒன்றியம் கொண்டசமுத்திரம் ஊராட்சியில் திமுக சார்பாக ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு சத்யானந்தம் மற்றும் மாவட்ட குழு உறுப்பினர் பதவிக்கு கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

அணைக்கட்டு எம்எல்ஏ
இவர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய கொண்டசமுத்திரம் பகுதிக்கு வந்த வேலூர் மாவட்டச் செயலாளரும் அணைக்கட்டு சட்டசபை உறுப்பினருமான நந்தகுமார் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வந்தார். அப்போது பொதுமக்களிடையே இலவச வீட்டு மனைப்பட்டா வாங்கவோ, முதியோர், விதவை ஓய்வூதியம் வாங்கவோ நாங்கள் உதவுவோம்.

அரசின் திட்டங்கள்
அது போல் மேற்கண்ட பணிகள் உள்பட அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க எந்த லஞ்சமும் வாங்க மாட்டோம். இது கருணாநிதி மீது ஆணையாகவும் இறைவன் மீது ஆணையாகவும் உறுதிமொழி எடுக்கிறோம் என வேட்பாளர்கள் எம்எல்ஏ நந்தகுமார் முன்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

முதல்வர் ஸ்டாலின்
உள்ளாட்சி தேர்தல் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார். அதில் சட்டசபை தேர்தலில் நல்லாட்சி மலர வேண்டும் என்று திமுக கூட்டணிக்கு வாக்களித்தீர்கள். உள்ளாட்சியிலும் நல்லாட்சி மலர திமுகவிற்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் ஆதரவளிக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தனது வீடியோவில் குறிப்பிட்டு வெளியிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications