வேலூரில் ஃபேஷன் பெண்.. நகை விற்று 1.42 கோடி முதலீடு இறைத்த குடியாத்தம் நபர்! இப்ப என்னாச்சு தெரியுமா
வேலூர்: வேலூரில் ஒரு பெண் போனில் பேசியதை நம்பி, நகைகளை விற்றும், கடன் வாங்கியும் ரூ.1.42 கோடி வரை பணத்தை கட்டியிருக்கிறார் குடியாத்தம் இளைஞர்.. கடைசியில் லாபமும் கிடைக்காமல் முதலீடு செய்த பணமும் திரும்ப கிடைக்காமல் இப்போது எஸ்பி ஆபீசுக்கு ஓடியிருக்கிறார்.. ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தானே செய்வார்கள்???
ஆன்லைன் வர்த்தகத்தில் கவனமாக இருக்கும்படி நம்முடைய போலீசார் அறிவுறுத்தியபடியே உள்ளனர்.. இதனால் பெரிய நஷ்டம் ஏற்படக்கூடும் என்பதால், அறிமுகம் இல்லாதவர்களின் செல்போன் லிங்குகளை திறக்க வேண்டாம், அதிக லாபம், உத்தரவாதம் எனக்கூறும் ஆன்லைன் வர்த்தக முதலீடுகள், போலியான வர்த்தக செயலிகள், முன்பின் தெரியாத வாட்ஸ்அப் குழுக்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று தொடர்ந்து அலர்ட் செய்து வருகிறார்கள்.

வங்கிக் கணக்குகள்
அதுமட்டுமல்ல, வங்கி கணக்குகளை தருமாறும், அதில் வரும் பணத்தை எடுத்துக் கொடுத்தால் நல்ல கமிஷன் தொகை தருவதாகவும் ஆசை வார்த்தைகள் கூறினால் யாரும் தங்களது வங்கி கணக்கு விவரங்களை மோசடி நபர்களுக்கு தர வேண்டாம் என்றும் இணையவழி மோசடிகள் மற்றும் குற்றங்களில் பாதிக்கப்பட்டால், உடனடியாக www.cybercrime.gov.in என்ற தேசிய சைபர் கிரைம் இணையதளத்திலும், தேசிய சைபர் கிரைம் உதவி எண் 1930 என்ற எண்ணை அழைக்க வேண்டும், அருகிலுள்ள சைபர் கிரைம் காவல் நிலையங்களை அணுக வேண்டும் என்றும் பலமுறை அட்வைஸ் தந்துள்ளார்கள்.
ஆனாலும், மோசடிகள் தொடர்கின்றன.. இதோ வேலூரில் ஒரு மோசடி நடந்துள்ளது. தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் என கூறி குடியாத்தம் இளைஞரிடம் ஆன்லைன் மூலம் ரூ.1.42 கோடி மோசடி செய்துள்ளதாக வேலூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
வேலூர் எஸ்பி ஆபீஸ்
குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த அந்த இளைஞர், வேலூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் தந்துள்ளார்.. அந்த புகாரில், "எனக்கு பேஸ்புக் ஆன்லைன் செயலி மூலம் ஒரு பெண் அறிமுகமானார். அவர் பல்வேறு தொழில்கள் செய்து வருவதாகவும், அந்தத் தொழிலில் தனக்கு அதிக லாபம் வருவதாகவும் சொன்னார்.
இதில் நீங்கள் பங்குதாரராக சேர்ந்தால் உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும் என்றெல்லாம் ஆசை வார்த்தை கூறினார். நான் வெளிநாட்டு டாலரில் தொழில்கள் செய்து வருகிறேன் என்று பல்வேறு விதங்களில் என்னிடம் பேசினார். இதை நம்பி அவரிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதலீடு செய்வதாக கூறினேன்.
பெங்களூர் ஃபேஷன் டிசைனிங்
அதற்கு அவர் பெங்களூர் ஃபேஷன் டிசைனிங் என்ற பெயரில் பெரிய தொழில் செய்து வருகிறேன். அதுவும் பகுதி நேரமாக தான் பணியாற்றி வருகிறேன் என்று கூறினார். இதையடுத்து அவர் பல்வேறு நபர்களின் வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்புமாறு என்னிடம் சொன்னார். இதை நம்பி நான் நகைகளை விற்றும், பலரிடம் கடன் வாங்கியும் ரூ.20 லட்சம், ரூ.30 லட்சம் என பல்வேறு தவணைகளில் வங்கி மூலம் பணத்தை செலுத்தி வந்தேன்.
இதையடுத்து அவரிடம் நான் லாபம் தருமாறு கூறினேன். அதற்கு அவர் இப்போது பிசினஸில் புதிய முறை புகுத்தப்பட்டுள்ளது.. இதன் மூலம் உங்களுக்கு பணம் செலுத்திய உடன் 24 மணி நேரத்தில் பணம் திரும்ப கிடைத்துவிடும். இதற்கு 20 சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறினார். மேலும் அவர்கள் அடிக்கடி என்னிடம் வாட்ஸ் அப் போன்ற ஆன்லைன் செயலி மூலம் அடிக்கடி தொடர்பு ஏற்படுத்தி வந்தனர்.
கதறும் குடியாத்தம் இளைஞர்
நீங்கள் இதுவரை செலுத்திய தொகை முழுவதும் கிடைக்க மீண்டும் பணம் செலுத்த வேண்டும் என்று கூறினார். இதையடுத்து மீண்டும் பணம் செலுத்தினேன். இப்படியே மொத்தம் ரூ.1.42 கோடி ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி விட்டேன். அவர்களிடம் இருந்து இதுவரை எனக்கு எந்த பணமும் மீண்டும் திரும்பி வரவில்லை. என்னை அந்தப் பெண் மற்றும் அவர்களுடன் சேர்ந்த நபர்கள் மோசடி செய்து விட்டனர். எனவே அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டு தர வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
ஒரு பெண் போனில் பேசியதை நம்பி, நகைகளை விற்றும், கடன் வாங்கியும் ரூ.1.42 கோடி வரை பணத்தை செலுத்திய நிலையில், கடைசியில் லாபமும் கிடைக்காமல் முதலீடு செய்த பணமும் திரும்ப கிடைக்காமல் இந்த குடியாத்தம் இளைஞர் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
ஆன்லைன் மூலம் முதலீடு செய்தால் அதிக லாபம், குறுகிய காலத்தில் பணம் இரட்டிப்பு என ஆசை காட்டி பணத்தை பறிக்கும் மோசடிகள் தொடர்ந்து நடந்தபடி உள்ளன.. குறிப்பாக சோஷியல் மீடியாவில் அறிமுகமாகும் நபர்களின் பேச்சை மட்டும் நம்பி பெரிய தொகையை முதலீடு செய்வது எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு இந்த சம்பவமும் இன்னொரு உதாரணமாகியுள்ளது...!!!


Click it and Unblock the Notifications
