மளிகை கடைக்கு நுழைந்த சரத்குமார்.. டக்னு பாக்கெட்டிலிருந்து.. 1 பாக்கெட் சிகரெட்டால் கலங்கிய வேலூர்
வேலூர்: வேலூரில் மளிகைக்கடையில் நடந்த சம்பவம் ஒன்று அதிர்ச்சியை தந்துவருகிறது.. இதுகுறித்த விசாரணையையும் போலீசார் முன்னெடுத்துள்ளனர்.
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்துள்ளது கேம்ரான்பேட்டை.. இங்கு வசித்து வருபவர் கருப்புசாமி.. 24 வயதாகிறது.. இவர் பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.. இதில், மளிகை பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்களையும் விற்றுவருகிறார். அதேபோல, இந்த கடையிலேயே டீ கடையும் கருப்புசாமி நடத்தி வருகிறார்.

பெட்டிக்கடை: இந்நிலையில், வெட்டுவானத்தை சேர்ந்த பன்னு(எ)சரத்குமார் என்பவர் நேற்றிரவு 10 மணிக்கு பைக்கில் வந்திருக்கிறார்.. பைக்கில் கருப்புசாமி பெட்டிக்கடைக்கு வந்த சரத்குமார், கடையில் வேலை செய்யும் பழனி என்பவரிடம், ஒரு பாக்கெட் சிகரெட்டை கேட்டுள்ளார்..
அதற்கு பழனி, ஒரு பாக்கெட் சிகரெட் வேண்டுமென்றால் 150 ரூபாய் வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.. உடனே சரத்குமார், "நான் யாருன்னு தெரியுமா? என்ன பத்தி கேட்டு பார்... இப்ப தான் ஜெயிலுக்கு போயிட்டு வெளியே வந்திருக்கேன்.. எவ்வளவு பெரிய ரவுடி நான்? என்கிட்ட காசு கேப்பியா? நீ எனக்கு இப்பவே 5 ஆயிரம் தர வேண்டும்" என்று மிரட்டியிருக்கிறார்.
சிகரெட்: சிகரெட் வாங்குவது நீங்கள்தானே? உங்களிடம்தான் பணம் கேட்க முடியும்? 150 ரூபாய் தந்துவிட்டு 1 பாக்கெட் சிகரெட் வாங்கி கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார். இதைக்கேட்டதும் மேலும் ஆத்திரமடைந்த சரத்குமார், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பழனி கழுத்தில் வைத்தார்.. இதனால் அதிர்ச்சியில் உறைந்து நின்றார் பழனி.
பழனியின் கழுத்தில் கத்தியை வைத்தவாறே, அவரது பாக்கெட்டில் வைத்திருந்து 5 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறித்து கொண்டு, பைக்கில் ஏறி தப்பி சென்றுவிட்டார்... இதற்கு பிறகு பெட்டிக்கடை ஓனர் கருப்பசாமியிடம் இதை பற்றி பழனி முறையிடவும், பள்ளிகொண்டா போலீசில் இருவருமே புகார் தந்தார்கள்.. இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்வதற்குள் சரத்குமார் தலைமறைவாகிவிட்டார்.
வலைவீச்சு: எனவே, அவரை தீவிரமாக வலைவீசி பல்வேறு இடங்களில் தேடினார்கள்.. இறுதியில், அங்குள்ள ஆற்று பகுதியில் சரத்குமார் பதுங்கியிருந்தார்.. அந்த இடத்திலேயே சரத்குமாரை போலீசார் மடக்கி பிடித்தனர்..
பெட்டிக்கடையில் பழனியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்து சென்றது உண்மைதான் என்று ஒப்புக்கொண்டார் சரத்குமார்..அவரிடமிருந்து பைக் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர். பிறகு வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையிலும் சரத்குமாரை அடைத்துள்ளனர் போலீசார்.
யார் யார்: சரத்குமார் தன்னை ரவுடி என்று சொல்லியே, அதே பகுதியில் நிறைய பேரிடம் மிரட்டி பணம் பறித்து வந்ததாக தெரிகிறது. பெரும்பாலும் இவரால் பாதிக்கப்பட்டது அப்பாவி மக்கள்தானாம்.. எனவே, இவரால் பாதிக்கப்பட்டவர்கள் யார் யார்? என்ற விசாரணையையும் போலீசார் கையில்எடுத்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications