பொன் நிற விக் அணிந்து வந்த பெண்கள்.. அமைச்சர் பொன்முடிக்கு எதிராக அதிமுக நூதன போராட்டம்!
விழுப்புரம்: பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திமுக அமைச்சர் பொன்முடியை கைது செய்ய வலியுறுத்தி திண்டிவனத்தில் அதிமுக மகளிர் அணியினர் பொன் நிறத்தில் விக் அணிந்து வந்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிமுக மகளிர் அணி, இளம்பெண்கள் பாசறை சார்பில் பெண்களை பற்றி இழிவாக பேசிய அமைச்சர் பொன்முடிக்கு எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரம் மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில், அமைச்சர் பொன்முடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கோல்டு ஹேர் விக் அணிந்து வந்தனர்.

தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சைவம், வைணவம் குறித்தும், பெண்கள் குறித்தும் பேசிய கருத்துகள் சர்ச்சைக்கு உள்ளானது. அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு அதிமுக, பாஜக உள்பட பல்வேறு கட்சிகளும் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தன. திமுக எம்.பி கனிமொழியும் பொன்முடி பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்/
இந்த சர்ச்சைப் பேச்சால் திமுகவின் துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து பொன்முடி நீக்கப்பட்டார். அதன் பின்னர் தன்னுடைய கருத்துக்கு அவர் மன்னிப்பு கோரினார். இதற்கிடையே பொன்முடிக்கு எதிராக ஹைகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றம் அமைச்சர் பொன்முடி மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
பெண்களை தொடர்ந்து இழிவுபடுத்தும் வகையில் கீழ்த்தரமான முறையில் ஆபாசமாக பேசியதாக அமைச்சர் பொன்முடியை கண்டித்தும் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக் கோரியும் திண்டிவனத்தில் அதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக மகளிர் அணி, இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில், விழுப்புரம் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் பொன்முடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பொன் நிற விக் அணிந்து வந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
பொன்முடி என்பதை குறிக்கும் வகையில் பெண்கள் தலையில் தங்க நிறத்தில் விக் அணிந்து வந்து அமைச்சர் பொன்முடிக்கு எதிராகவும், பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பொன்முடியை கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications