லோக்சபா தேர்தலில் ஓபிஎஸ் உடன் பயணம்.. தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்க இல்லை... டிடிவி தினகரன் உறுதி
விருதுநகர்: நாடாளுமன்ற தேர்தலை ஓபிஎஸ் உடன் இணைந்து சந்திப்போம் என டிடிவி தினகரன் கூறியுள்ளார். இனிவரும் அனைத்து நிகழ்வுகளிலும் இருவரும் சேர்ந்துதான் பயணிப்போம் என்று கூறியுள்ள டிடிவி தினகரன் நாங்கள் NDA கூட்டணியில் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் ரங்கமன்னார் திருக்கோவிலில் அமமுக பொதுச்செயலாளர் சாமி தரிசனம் செய்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், "வரும் நாடாளுமன்றத் தேர்தலை ஓபிஎஸ் உடன் இணைந்து தேர்தலை சந்திப்போம். இனிவரும் அனைத்து நிகழ்வுகளிலும் இருவரும் சேர்ந்துதான் பயணிப்போம் என்று கூறினார்.

நாங்கள் NDA கூட்டணியில் இல்லை. அதனால்தான் நடைபயணத்திற்கு எங்களை அண்ணாமலை அழைக்கவில்லை. அதுகுறித்து அண்ணாமலையிடமே கேளுங்கள். வரும் லோக்சபா தேர்தலில் அமமுகவின் நிலைப்பாடு குறித்து வரும் டிசம்பர் மாதம் தெரிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அண்ணாமலையின் நடைபயணம் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்று கேட்டதற்கு பதிலளித்த டிடிவி தினகரன், அதை ஊடகங்கள்தான் கூற வேண்டும் என்றார். அவர் ஒரு கட்சியின் தலைவர் என்பதால் நடைபயணம் மேற்கொள்கிறார். திமுக பைல்ஸ் 2 குறித்து நான் இன்னும் பார்க்கவில்லை என்றும் கூறினார்.
அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், கூட்டணியில் இருந்து பாஜகவே வெளியேற்றும் வரை அவர்களுடன் கூட்டணியில் இருப்போம் என்று கூறினார். ஆனால், அவருடன் இணைந்து தேர்தலைச் சந்திக்கப்போவதாகச் சொல்லும் டிடிவி தினகரன் பாஜக கூட்டணியில் அமமுக இல்லை என்று கூறியுள்ளார்.
அதிமுகவில் இருந்து ஓரங்கப்பட்ட பின்னர் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை அடிக்கடி சந்தித்து வருகிறார் ஓ.பன்னீர் செல்வம். கடந்த மே மாதம் ஓ. பன்னீர்செல்வம் டிடிவி தினகரனைச் சந்திக்க அவரது வீடு தேடிச் சென்றிருந்தார். அப்போதே இருவரும் இணைந்து செயல்படப் போவதாகக் கூறியிருந்தனர்.
இந்த நிலையில் ஆகஸ்ட் 1ஆம் தேதி ஓபிஎஸ் அணியினர் கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி மாநாடு நடத்துகின்றனர். அந்த மாநாட்டில் அமமுக பங்கேற்கும் என தினகரன் அறிவித்துள்ளார். அடுத்த நகர்வாக நாடாளுமன்ற தேர்தலிலும் இருவரும் இணைந்து செயல்பட உள்ளதாகத் தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு கூட்டணி பற்றி பேசிய டிடிவி தினகரன், நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமரை தேர்வு செய்யும் கூட்டணியில் அமமுக இடம்பெறும் என்று தெரிவித்திருந்தார். இந்தியாவின் பிரதமரை உருவாக்குவதில் அணில் போன்ற செயல்பாட்டில் நாம் இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் என்டிஏ கூட்டணியில் அமமுக இல்லை என்று தற்போது கூறியுள்ளார் டிடிவி தினகரன்.
எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் சட்டப்போராட்டம் நடத்தி வரும் நிலையில் சசிகலா மற்றும் டி.டி.வி தினகரனுடன் இணைந்து தொண்டர்களை ஒருங்கிணைத்து அதிமுகவை மீட்டெடுப்போம் என ஓ.பி.எஸ் கூறியிருந்தார். இந்த நிலையில் டிடிவி தினகரனின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications