முதலமைச்சருக்கே பாதுகாப்பு இல்லை.. தவெக வெட்கப்படணும்.. கனிமொழி அதிரடி
விழுப்புரம்: கட்சி ஆரம்பித்த இரண்டே ஆண்டுகளில் ஆட்சியை பிடித்து தவெக ஆச்சர்யப்படுத்தியுள்ளது. தவெக வெற்றிக்கு பெண் வாக்காளர்கள் முக்கிய காரணம். பெண்கள் பாதுகாப்புக்காக முதலமைச்சர் விஜய் சிங்க பெண் படை ஆரம்பித்தார். ஆனால் சிறுமிகள் தொடங்கி மாவட்ட ஆட்சியர் வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை. செஞ்சி சிறுமி மாயமாகி ஒரு மாதத்திற்கு மேலாகிறது. இந்நிலையில் தவெக ஆட்சியில் முதலமைச்சருக்கே பாதுகாப்பு இல்லை என கனிமொழி விமர்சித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்ட செஞ்சியில் மாயமான சிறுமியின் குடும்பத்தினரை திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி சந்தித்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "சிறுமி வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டுமென திமுக சொன்ன பிறகு தான் அரசு மாற்றியது. இப்படி பல விஷயங்களும் திமுக சொன்ன பிறகே நடக்கிறது. நாங்கள் சொல்லி சொல்லி ஆட்சியை நடத்துவதற்கு பதிலாக நாங்களே ஆட்சியில் இருக்கலாமே.

தவெக வெட்கப்பட வேண்டும்
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குழந்தைகள் பாதுகாக்கப்படுவார்கள், பெண்கள் பாதுகாக்கப்படுவார்கள் ஒரு பாதிப்பு கூட ஏற்படாது என கூறினார்கள். தமிழகத்தின் வரலாற்றிலேயே இல்லாதளவுக்கு பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடக்கிறது. எந்த பதவியில் இருந்தாலும் அவர்களுக்கே ஆளுங்கட்சியால் பாதுகாப்பு இல்லை என சொல்லும் நிலை உள்ளது. அதையும் நியாயப்படுத்தும் போக்கு நடக்கிறது.
தீபாவளிக்கு இவ்வளவு கொலைகள் நடந்துள்ளதே என கேட்டால், கடந்த ஆட்சியில் அவ்வளவு கொலை நடந்தது என ஒப்பீடு செய்கிறார்கள். திமுக ஆட்சியில் முன்பு அதிகளவு இருந்த கொலையை குறைக்க நடவடிக்கை எடுத்தனர். தவெக அதை பழையபடி எடுத்து செல்கிறார்கள். நீங்களே வெட்கப்படுமளவுக்கு பேசுகிறார்கள். திமுக போராட்டம் நடத்துவோம். எங்கள் தலைவர் உள்ளிட்டோர் வலியுறுத்துவோம். சட்டமன்றம் நடந்தால் அழுத்தமாக பேசுவோம்.
முதலமைச்சருக்கே பாதுகாப்பு இல்லை
ஆனால் ஆளுங்கட்சியில் இருப்போர் மனசாட்சியோடு குற்றங்கள் நடைபெறாமல் இருக்க காவல்துறையை பயன்படுத்த வேண்டும். பொறுப்பில்லாமல் தங்கள் பாதுகாப்புக்காக மட்டுமே அரசை பயன்படுத்துகிறார்கள். குற்றம் நடந்த பிறகாவது குற்றவாளிகளை கண்டறிந்து, குழந்தைகளை மீட்க வேண்டும். அதை செய்யாமல் யாருக்கும் நம்பிக்கையில்லாத நிலை உள்ளது. முதலமைச்சருக்கே தன் ஆட்சியில் பாதுகாப்பு இல்லாத நிலைமை இருக்கிறது.
அரசு இதைப்பற்றி எந்த கவலையும் இல்லாமல் உள்ளனர். குழந்தைகள் நலன், காவல்துறை இரண்டுமே முதலமைச்சர் விஜயின் கட்டுப்பாட்டில் உள்ளது. குழந்தைகள் மூலம் வீடுகளில் ஓட்டு வாங்கி ஆட்சிக்கு வந்துள்ளனர். பள்ளியில் கேக் வெட்ட போனவர், செஞ்சி சிறுமியின் வீட்டிற்கு வந்து குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறியிருக்க வேண்டும். அவர் வராவிடினும் பொறுப்பு அமைச்சர், மாவட்ட செயலாளர் யாருமே வரவில்லை" என்றார்.


Click it and Unblock the Notifications
