பார்சல் சாப்பாட்டில் ஊறுகாய் வைக்காத ஹோட்டலுக்கு ரூ.35 ஆயிரம் அபராதம்.. விறுவிறு விழுப்புரம்
விழுப்புரம்: விழுப்புரத்தில் பார்சல் உணவில் ஊறுகாய் வைக்காமல் விட்டதோடு திரும்பி சென்று கேட்ட போது அதற்குரிய பணத்தை திருப்பி வழங்க ஹோட்டல் உரிமையாளர் மறுத்ததால், நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தில் வாடிக்கையாளர் வழக்கு தொடர்ந்துள்ளார். இதை விசாரித்த ஆணையம், ஊறுகாய் வழங்காத ஹோட்டலுக்கு 35 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
ஹோட்டல்களில் பார்சல் வாங்கி சென்று சாப்பிடும் பழக்கம் பலருகும் உள்ளது. அப்படி பார்சல் வாங்கி செல்லும் போது சில நேரங்களில் கூட்டு, பொறியல் போன்றவற்றை கட்டி கொடுக்க ஹோட்டல் ஊழியர்கள் மறந்து விடுவதை பார்க்க முடியும். ஏன் சில நேரங்களில் சாம்பார் கூட கட்டி கொடுக்க மறந்த சம்பவங்கள் நிகழ்ந்து விடும்...

இதை வாடிக்கையாளர்கள் பலரும் பெரிது படுத்த மாட்டார்கள்.. ஆனால் விழுப்புரத்தில் ஊறுகாய் வைக்க மறந்த ஓட்டல் நிர்வாகத்திற்கு வாடிக்கையாளர் ஒருவர் தக்க பாடம் புகட்டியிருக்கிறார். நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து 35 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக பெற்றுள்ளார். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
விழுப்புரம் அருகே உள்ள வழுதரெட்டி பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவர் அனைத்து நுகர்வோர் பொதுமக்கள் சுற்றுச்சூழல் பொதுநல சங்கத்தின் மாநில தலைவராகவும் இருக்கிறார். இவர் அன்னதானம் வழங்குவதற்காக உணவகம் ஒன்றில் 25 பார்சல்களை வாங்கியிருக்கிறார். கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஹோட்டலில் பார்சல் வாங்கியிருக்கிறார்.
பார்சல் உணவு என்றால் ரூ.80 எனவும், பார்சலில் சாதம், சாம்பார், கார குழம்பு, ரசம், மோர், கூட்டு, பொறியல், அப்பளம், வாழை இலை, கவர் மற்றும் ஊறுகாய் 1 ரூபாய் பொட்டலம் என 25 சாப்பாடு கொடுப்பதாக கூறியுள்ளார். இதன்படி, 25 சாப்பாட்டுக்கு ரூ.80 வீதம் ரூ.2 ஆயிரத்தை ஆரோக்கியசாமி கொடுத்து பார்சல் வாங்கியிருக்கிறார். ஒட்டலில் ஒரிஜினல் பில் கொடுக்காமல் பேப்பரில் உணவு பொட்டலத்திற்கான பில் கொடுத்துள்ளனர்.
25 பார்சல் உணவுகளையும் ஒரு சாக்குப்பையில் கட்டி ஹோட்டல் ஊழியர்கள் கொடுத்து இருக்கிறார்கள். அதை வாங்கி கொண்டு சென்ற ஆரோக்கியசாமிக்கு பார்சல் உணவுடன் வழங்க வேண்டிய ஊறுகாய் இல்லாமல் இருப்பதை கவனித்துள்ளார். இதுபற்றி ஹோட்டல் உரிமையாளரிடம் ஆரோக்கியசாமி கேட்டுள்ளார். இதையடுத்து, அங்கிருந்த ஊழியர்களை அழைத்து உரிமையாளர் கேட்டு இருக்கிறார்.
இதில் பார்சலுடன் ஊறுகாய் வைக்கவில்லை என தெரியவந்தது. இதையடுத்து, ஊறுகாய்க்குரிய தொகையான 25 ரூபாயை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். ஆனால் ஹோட்டல் உரிமையாளர் அதை திருப்பி கொடுக்க மறுத்ததால், மன உளைச்சலுக்கு ஆளான ஆரோக்கியசாமி இது தொடர்பாக விழுப்புரம் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த விழுப்புரம் நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.
அதாவது, ஆரோக்கியசாமி வாங்கிய பார்சல் உணவில் ஊறுகாய் வைக்காதது சேவை குறைபாடு ஆகும். எனவே ஆரோக்கியசாமிக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்காக 30 ஆயிரம் ரூபாயும், வழக்கு செலவுக்காக ரூ.5 ஆயிரமும், ஊறுகாய் பொட்டலம் 25-க்குரிய தொகை ரூ.25-ம், தொகைக்குரிய ஒரிஜினல் ரசீதும், தீர்ப்பு வழங்கிய 45 நாட்களுக்குள் அபராத தொகையாக ஹோட்டல் உரிமையாளர் செலுத்த வேண்டும். தவறினால் மாதம் ஒன்றுக்கு 9 சதவீத வட்டியுடன் பணம் செலுத்த வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications