Ex பாஜக பெண் நிர்வாகி பார்த்த வேலை.. கலங்கிப்போன கள்ளக்குறிச்சி மக்கள்.. கோடிக்கணக்கில் மோசடி
விழுப்புரம்: கள்ளக்குறிச்சியில் பொதுமக்களிடம் ஏலச்சீட்டு நடத்தி 2 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த வழக்கில் முன்னாள் பாஜக பெண் நிர்வாகி மற்றும் அவரது கணவரை காவல் துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறுக சிறுக பணத்தை சேமிக்கும் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் ஏலச்சீட்டு, தீபாவளி சீட்டு, தனியார் நிதி நிறுவனங்களில் தங்களது பணத்தை போட்டு ஏமாறும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. தபால் நிலையங்கள், வங்கிகளில் ஏராளமான சேமிப்பு வசதிகள் இருந்தாலும் அக்கம்பக்கத்தினரை நம்பி சீட்டு போட்டு பல மக்கள் மோசடிக்கு ஆளாகின்றனர். இதுகுறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தாலும் மக்கள் ஏமாற்றப்படும் சம்பவங்கள் குறைந்தபாடில்லை.

அந்த வகையில், கள்ளக்குறிச்சியில் பொதுமக்களிடம் ஏலச்சீட்டு நடத்தி 2 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த வழக்கில் முன்னாள் பாஜக பெண் நிர்வாகி மற்றும் அவரது கணவரை காவல் துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி, அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் கள்ளக்குறிச்சி நகர முன்னாள் பாஜக தலைவர் சூரியமகாலட்சுமி. இவரது கணவர் சிவகுமார். பாஜக மாவட்ட தரவுக் தள மேலாண்மை முன்னாள் துணைத் தலைவராக இருந்துள்ளார். இவர்கள் இருவரும் தீபாவளி மற்றும் ஏலச்சீட்டு நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இவர்கள் பொதுமக்களிடம் இருந்து ஏலச்சீட்டு, தீபாவளிச் சீட்டு என்று கூறி பல லட்சம் மதிப்பிலான பணத்தை மோசடி செய்ததாக கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புகாரைத் தொடரந்து காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், சிவகுமாரும், சூரியமகாலட்சுமியும் சேர்ந்து 2017 ஆம் ஆண்டு முதல் தீபாவளி சீட்டு, ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளது தெரியவந்துள்ளது. அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இவர்களிடம் 1 லட்சம் ரூபாய் சீட்டு முதல் 5 லட்சம் ரூபாய் சீட்டுக்கான தொகையை மாதம்தோறும் கட்டி வந்துள்ளனர். பணம் கட்டியவர்களுக்கு சிவகுமாரும், சூரியமகாலட்சுமியும் சரியாக பணத்தை கொடுத்து வந்துள்ளனர்.
இதனால் அவர்களை நம்பி ஏராளமான மக்கள் பணம் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், 2023 ஆம் ஆண்டு முதல் சீட்டு கட்டிய மக்களுக்கு சரியாகப் பணத்தைக் கொடுக்காமல் தாமதப்படுத்தியுள்ளனர். பொதுமக்கள் இதுகுறித்து கேட்டால் அந்த தொகைக்கான வட்டியைத் தருவதாகவும், ஏலம் எடுத்த பணத்தை மொத்தமாக தருகிறோம் என்று கூறி வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஆண்டில் திடீரென சூரியலட்சுமி, சிவகுமார் தம்பதியினர் தலைமறைவாகியுள்ளனர். மேலும், 50க்கும் மேற்பட்ட மக்களிடம் ரூ. 2 கோடியே 60 லட்சத்து 66 ஆயிரத்து 867 மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து, தலைமறைவான தம்பதியை போலீஸார் தீவிரமாக தேடி வந்த நிலையில், அவர்கள் இருவரும் கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. காவல் துறையினர் அங்கு சென்று இருவரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications