செஞ்சி சிறுமி எங்கே? ஸ்டேஷனில் வைத்து தாயிடம் ஒரு மணி நேரம் விசாரித்த சிபிசிஐடி! க்ளூ கிடைத்ததா?
விழுப்புரம்: செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டியை சேர்ந்த 7 வயது சிறுமி மாயமான விவகாரத்தில் தாய் பவானியிடம், காவல் நிலையத்தில் வைத்து ஒரு மணி நேர விசாரணைக்கு பிறகு அவரை சிபிசிஐடி போலீஸார் பேருந்தில் ஏற்றி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டியில் 7 வயது சிறுமி ஹேமலதா கடந்த 11-ம் தேதி பிறந்தநாள் கொண்டாடிய அன்று இரவு வீட்டில் உறங்கியபோது மாயமானார். 14 நாட்களாகியும் அவரை கண்டுபிடிக்காததால் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. கடந்த 22 ஆம் தேதி முதல் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நேற்று ஆலம்பூண்டி பள்ளி வளாகத்தில் வைத்து தாய், தந்தை, பாட்டி உள்ளிட்ட குடும்பத்தினரிடம் 6 மணி நேரம் பொதுவான விசாரணை நடந்தது. 6 ஆண்டுகளாக கொண்டாடாத பிறந்தநாளை இந்த ஆண்டு மட்டும், புதிய ஆடை, கேக், சாக்லேட் வாங்கிக் கொடுத்து சிறப்பாக கொண்டாடியது ஏன்? ஆடைகள், கேக் எந்த கடையில் யார் வாங்கினார்கள்?
பிறந்தநாள் விழாவுக்கு வந்தவர்கள் யார் ?
பிறந்தநாள் விழாவுக்கு யார் யார் வந்தார்கள்? என்பது குறித்து அப்போது விசாரிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டது. ஆலம்பூண்டி கிராமத்தில் இருந்து சிறுமியின் தாய் பவானியை சி.பி.சி.ஐ.டி போலீசார் ஆட்டோவில் வைத்து செஞ்சி காவல் நிலையத்திற்கு வரவழைத்தனர்.
சிபிசிஐடி டிஎஸ்பி கீதா தலைமையிலான குழுவினர், இன்ஸ்பெக்டர்கள் ரேவதி, பாலமுருகன் உள்ளிட்டோர் தாய் பவானியிடம் சந்தேகத்தின் அடிப்படையில் தனியாக அழைத்து வந்து தீவிர விசாரணையை தொடங்கினர். சிறுமி மாயமான அன்று இரவு வீட்டில் என்ன நடந்தது? தாய், தந்தைக்கு இதில் தொடர்பு உள்ளதா? தெரிந்தே நடந்ததா? தெரியாமல் நடந்ததா? சிறுமியை யாரேனும் கடத்திச் சென்றார்களா? திட்டமிட்டு கடத்தப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடந்தது.
ஒரு மணிநேர விசாரணை
சுமார் ஒரு மணி நேர விசாரணைக்குப் பிறகு, சிபிசிஐடி போலீசார் சிறுமியின் தாய் பவானியை அவ்வழியாக சென்ற பேருந்தில் ஏற்றி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இரண்டாவது நாளாக தாயிடம் மட்டும் தனியாக விசாரணை நடந்ததால், இந்த வழக்கில் விரைவில் முக்கிய துப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிபிசிஐடி போலீஸ்
சிறுமியை உறவினர்களிடம் விற்றுவிட்டதாக சிபிசிஐடி போலீஸார் சந்தேகிக்கிறார்கள். பொதுவாக யாராக இருந்தாலும் காணாமல் போய் அவர்களுக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்திருந்தால், அவர்களது உடல் அல்லது உடல் உறுப்புகளாவது கிடைக்கும். ஆனால் செஞ்சி சிறுமி விவகாரத்தில் முதல் நாள் முதலே கிணறுகள், கரும்பு தோட்டம், குப்பை கூலங்கள், நீர் நிலைகள் உள்ளிட்ட இடங்களில் தேடிய நிலையிலும் அது போன்று எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை என தெரிகிறது. எனவே சிறுமி உயிருடன் இருக்கலாம் என்றே சிபிசிஐடி போலீஸார் நம்பிக்கை வைத்துள்ளனராம்.
பிறந்தநாள் கொண்டாட்டம் ஏன்?
சிறுமிக்கு இத்தனை நாட்களாக பிறந்தநாள் கொண்டாடாமல் இந்த ஆண்டு மட்டும் பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்தது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும் சிறுமி குறித்து தாய் பவானி எதையோ மறைக்கிறார் என்றே சத்தியமங்கலம் போலீஸாரும், சிபிசிஐடி போலீஸாரும் கருதுகிறார்கள். இதனால்தான் திருப்பி திருப்பி தாய் பவானியையும், அவரது தாயையும் அழைத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சிறுமியை யாரேனும் உறவினர்களுக்கு விற்றிருக்கலாம் என சந்தேகமடைகிறார்கள்.




Click it and Unblock the Notifications
