செஞ்சி சிறுமி மாயம்.. பாபநாசம் படம் போல திட்டமிட்டு பேசுகிறார்களா? பெற்றோர் பக்கம் திரும்பிய CBCID
விழுப்புரம்: பாபநாசம் படத்தில் வருவது போல மொத்த குடும்பமும் சொல்லி வைத்து பேசுகிறார்களோ என்று செஞ்சி சிறுமி வழக்கில் சிபிசிஐடி போலீசார் சந்தேகம் அடைந்துள்ளார்களாம். இதன் காரணமாக சிறுமியின் பெற்றோர் பக்கம் தங்கள் கவனத்தை போலீசார் திருப்பி உள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி தம்பதியின் 7 வயது மகள் ஹேமலதா மாயமான சம்பவம் ஒரு மாதத்தைக் கடந்து நீடித்து வருகிறது. கடந்த அக்டோபர் 11 அன்று இரவு தனது பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு உறங்க சென்ற பின் அவர் காணாமல் போனார்.

தாய் மற்றும் பாட்டியின் அருகில் படுத்து உறங்கிய குழந்தை, மறுநாள் அதிகாலையில் மர்மமான முறையில் காணாமல் போனார்.
காடுகள், கிணறுகள், 14 நேஷனல் பெர்மிட் லாரிகள், ரவுடி ராஜதுரை, நாமக்கல் கோவில் சிசிடிவி எனப் பல திசைகளில் அலைக்கழிந்த சிபிசிஐடி தனிப்படை, தற்போது தங்களது முழுச் சந்தேகப் பார்வையையும் குடும்பத்தினர் பக்கமே திருப்பியுள்ளது. தொலைந்த இடத்தில் தேடுவோம் என்று வீட்டிற்கு உள்ளேயே போலீசார் தேட முடிவு செய்துள்ளனர்.
குறிப்பாக, பெற்றோரின் வாக்குமூலங்கள் முன்னுக்கு பின் முரணாக இருப்பதும், அவர்கள் பேசும் விதம் ஏதோ ஒரு சினிமா ஸ்கிரிப்ட் போல திட்டமிட்டுப் பேசுவது போல் இருப்பதும் அதிகாரிகளிடையே பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாபநாசம் படம் போல ஒத்திகை பார்த்து பேசுகிறார்கள்?
சமீபத்தில் சென்னை சிபிசிஐடி டிஐஜி விக்ரமன் நேரடியாக ஆலம்பூண்டி கிராமத்திற்கு வந்து, வீட்டின் கதவை உள்ளே பூட்டி பாட்டி, தாய் பவானி மற்றும் தந்தை வடிவேலு ஆகியோரிடம் தனித்தனியாக விசாரித்தார்.
அப்போது, எத்தனை முறை குறுக்குக் கேள்விகள் கேட்டாலும், தாயும் தந்தையும் ஒரே மாதிரியான வார்த்தைகளைப் பயன்படுத்துவதும், ஒரு குறிப்பிட்ட வட்டத்தைத் தாண்டி எந்தத் தகவலையும் வெளியே விடாமல் பேசுவதும் அதிகாரிகளை யோசிக்க வைத்துள்ளது.
சாதாரண கூலித் தொழிலாளி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், காவல்துறையின் உயரதிகாரிகளின் கேள்விகளை இவ்வளவு சாதுரியமாக எதிர்கொள்வது, ஏதோ பாபநாசம் திரைப்படத்தில் வருவது போல முன்கூட்டியே என்ன பேச வேண்டும் என்று பார்த்து தயாராகி பேசுவது போல் இருப்பதாகப் புலனாய்வு வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இவர்கள் மீடியாவிடம் பேசும் போதும் அதே ஸ்டைலில் வார்த்தை பிசகாமல் பேசுகிறார்கள். இந்த பெர்பெக்ட் பேச்சுதான் போலீசாரை சந்தேகிக்க வைத்துள்ளது.
குடும்பத்தின் மீது சந்தேகத்தை அதிகரிக்கும் 4 முக்கியக் காரணங்கள்:
குழந்தை மாயமான நள்ளிரவில், பக்கத்து வீட்டுப் பெண்ணுக்குக் குழந்தையின் அம்மா.. அம்மா.. என்ற அலறல் சத்தம் கேட்டுள்ளது. அதேபோல் 200 மீட்டர் தள்ளி வசிக்கும் மூதாட்டி மணிமேகலையின் வீட்டின் கதவை யாரோ பலமாகத் தட்டிய சத்தமும் கேட்டுள்ளது. ஆனால், ஒரே சிறிய அறையில் குழந்தைக்கு மிக அருகில் படுத்து உறங்கிய தாய், தந்தை மற்றும் பாட்டி ஆகிய மூவருக்குமே, வீட்டின் கதவு திறந்த சத்தமோ அல்லது குழந்தை வெளியே சென்ற சத்தமோ துளியும் கேட்கவில்லை என்று கூறுவது நம்பும்படியாக இல்லை என அதிகாரிகள் கருதுகின்றனர்.
சிறுமியின் குடும்பத்தினர் செங்கல் சூளைப் பணிகளுடன் தொடர்புடையவர்கள். ஆரம்பத்தில் செங்கல் சூளையில் சாதாரணமாக விசாரித்த சிபிசிஐடி, இப்போது மீண்டும் தடயவியல் நிபுணர்களை நேரில் அழைத்து வந்து அங்குள்ள சாம்பல் மற்றும் மண் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளது. குடும்பத்தாரின் வாக்குமூலங்களில் உள்ள ஓட்டைகளைத் தொடர்ந்து, அந்தச் செங்கல் சூளையில் ஏதேனும் ரகசியம் புதைந்துள்ளதா என்ற கோணத்தில் இந்த அறிவியல் சோதனை நடத்தப்படுகிறது.
குடும்பத்தாரின் மீது எழுந்த சந்தேகத்தை உறுதிப்படுத்தும் விதமாக, பெற்றோரின் செல்போன்கள் மற்றும் வங்கி கணக்குப் புத்தகங்களைச் சிபிசிஐடி பறிமுதல் செய்துள்ளது. 6 ஆண்டுகளாகக் கொண்டாடப்படாத பிறந்தநாள் விழா அன்று மட்டும் ₹2,000 கேக் வெட்டியது, நடுப்பட்டு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரிடம் தாய் ₹2,000 பணம் வாங்கியது எனப் பணப் பரிமாற்றங்கள் சந்தேகத்தைக் கிளப்பியுள்ளதால், வங்கிக் கணக்குகள் மற்றும் அழிக்கப்பட்ட செல்போன் தரவுகள் சல்லடை போடப்படுகின்றன.
ஆரம்பத்தில் வேலைக்குப் போகாமல் பசி பட்டினியில் கிடப்பதாகக் கதறி அழுத தாய் பவானி, கடந்த சில நாட்களாக "என் மகள் கண்டிப்பாக உயிருடன் இருக்கிறாள்" என்று அதீத நம்பிக்கையுடன் பேசி வருகிறார். எந்தத் தடயமும் கிடைக்காத நிலையில், குழந்தையைப் பற்றிய இந்த உறுதியான நம்பிக்கை அவருக்கு எப்படி வந்தது என்ற கோணத்திலும் அதிகாரிகள் துருவி வருகின்றனர்.
மர்ம முடிச்சு?
வெளியாட்கள் கடத்திச் சென்றதற்கான எந்த சிசிடிவி ஆதாரமோ, பணயக் கோரிக்கையோ இதுவரை வராத நிலையில், வீட்டிற்குள்ளேயே இருக்கும் ரகசியங்களை உடைத்தால் மட்டுமே உண்மை வெளிவரும் என்ற முடிவுக்குச் சிபிசிஐடி வந்துள்ளது.
தடயவியல் நிபுணர்களின் செங்கல் சூளை ஆய்வு முடிவுகளும், பெற்றோரின் வங்கி மற்றும் செல்போன் தடயவியல் அறிக்கைகளும் கைக்கு வந்தவுடன், ஒரு மாதத்திற்கும் மேலாகத் தொடரும் செஞ்சி சிறுமி ஹேமலதா வழக்கில் மிகப்பெரிய அதிரடி நடவடிக்கைகள் பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




Click it and Unblock the Notifications
