செஞ்சி சிறுமி மாயம்.. இனி என்ன ஆகும்? விசாரணையில் என்னதான் நடக்கிறது? DGP அகர்வால் முக்கிய விளக்கம்
விழுப்புரம்: செஞ்சி சிறுமி மாயமான வழக்கின் தற்போதைய நிலை குறித்துத் தமிழகக் காவல்துறை தலைமை இயக்குநர் DGP மகேஷ் குமார் அகர்வால் முதல்முறையாக முக்கிய விளக்கத்தை அளித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி தம்பதியின் 7 வயது மகள் ஹேமலதா (ஹேமாவதி) மாயமான சம்பவம் ஒரு மாதத்தைக் கடந்து நீடித்து வருகிறது. கடந்த அக்டோபர் 11 அன்று இரவு தனது பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு, தாய் மற்றும் பாட்டியின் அருகில் படுத்து உறங்கிய குழந்தை, மறுநாள் அதிகாலையில் மர்மமான முறையில் காணாமல் போனார்.

வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்ட பிறகு, டிஐஜி விக்ரமன் நேரடியாகக் கிராமத்திற்கு வந்து பாட்டி, தாய் மற்றும் தந்தையிடம் தனித்தனியாக விசாரித்தார். அதோடுஅரசுப் பள்ளி முகாம் அறையில் பெற்றோரிடம் தலா 7 மணி நேரம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. மேலும், செங்கல் சூளையில் தடயவியல் நிபுணர்கள் சோதனை நடத்தியது. பெற்றோரின் செல்போன்கள் மற்றும் வங்கிப் புத்தகங்கள் ஆய்வுக்கு எடுக்கப்பட்டதும் வழக்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், செஞ்சி சிறுமி மாயமான வழக்கின் தற்போதைய நிலை குறித்துத் தமிழகக் காவல்துறை தலைமை இயக்குநர் DGP மகேஷ் குமார் அகர்வால் முதல்முறையாக முக்கிய விளக்கத்தை அளித்துள்ளார்.
டிஜிபி அகர்வால் கூறியது என்ன?
செஞ்சி சிறுமி மாயமான விவகாரத்தில் ஒரு மாதத்திற்கு மேலாகியும் இன்னும் குழந்தை மீட்கப்படாதது குறித்துப் பொதுமக்களும் எதிர்க்கட்சிகளும் கேள்வி எழுப்பி வரும் நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய டிஜிபி அகர்வால் வழக்கின் தீவிரத்தை உறுதிப்படுத்தினார்:
செஞ்சி சிறுமி மாயமான விவகாரம் தொடர்பாகத் தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை ஒரு கோணத்தில் மட்டுமல்லாமல், பல்வேறு கோணங்களில்காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கில் ஒரு தரமான புலனாய்வு மிகத் துல்லியமாக நடந்து கொண்டிருக்கிறது. CBCID காவல்துறையின் பல்வேறு சிறப்புப் பிரிவுகள் ஒன்றாக இணைந்து இந்த வழக்கை விசாரித்து வருகின்றன.
வழக்கின் முக்கியத்துவத்தைக் கருதி, காவல்துறையின் மூத்த உயர் அதிகாரிகள் நேரடியாகக் களமிறங்கி விசாரணையை நடத்தி வருகின்றனர். மிக விரைவில் இந்த வழக்கில் நல்ல முடிவு எட்டப்படும், என்று டிஜிபி அகர்வால் தெரிவித்துள்ளார்.
வழக்கில் அதிகரித்துள்ள வேகம்!
டிஜிபி அகர்வால் குறிப்பிட்டுள்ளதைப் போல, ஏற்கனவே சிபிசிஐடி டிஐஜி விக்ரமன் நேரடியாக ஆலம்பூண்டி கிராமத்திற்கு வந்து கள ஆய்வு செய்ததுடன், விசாரணையை வேகப்படுத்தக் கூடுதலாக ஆய்வாளர்கள் குமார் மற்றும் சாஸ்தா ஆகியோரையும் நியமித்துள்ளார்.
மேலும், தமிழகத்தின் உளவுப் பிரிவுகளான OCIU மற்றும் SBCID அதிகாரிகள், சைபர் கிரைம் நிபுணர்கள் மற்றும் தடய அறிவியல் துறை குழுவினர் எனப் பல்வேறு பிரிவுகள் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகின்றனர்.
ஒருபுறம் செங்கல் சூளை சாம்பல் சோதனை அறிக்கையின் முடிவுகள் எதிர்பார்க்கப்படும் நிலையில், மறுபுறம் மாநிலக் காவல்துறை தலைவரான டிஜிபி அகர்வால் நேரடியாக இந்த வழக்கின் முன்னேற்றம் குறித்துப் பேசியிருப்பது, செஞ்சி சிறுமி ஹேமலதா வழக்கில் மிக விரைவில் ஒரு முக்கியத் திருப்பம் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.



Click it and Unblock the Notifications
