முக்காலா.. முக்காபுலா.. மாணவிகளுடன் ஜாலியாக டான்ஸ் ஆடி Vibe ஆன அமைச்சர் பொன்முடி!
விழுப்புரம்: மூத்த அமைச்சர் பொன்முடி, மாணவிகளுடன் சேர்ந்து ஜாலியாக டான்ஸ் ஆடிய காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் 12 குழுக்களை அமைத்தார். அந்த குழுக்கள் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் அரசியல், திரைத்துறை, சமூகநீதி பங்களிப்பை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

அந்தவகையில், திமுகவின் எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் குழு சார்பில் முத்தமிழ்த் தேர் அலங்கார ஊர்தி வடிவமைக்கப்பட்டது. இந்த முத்தமிழ்த் தேர் அலங்கார ஊர்தி கன்னியாகுமரியில் இருந்து தமிழ்நாடு முழுவதும் கொண்டு செல்லப்படுகிறது. அந்தவகையில் முத்தமிழ்த்தேர் அலங்கார ஊர்தி விழுப்புரம் வருகை புரிந்தது.
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், எம்.எல்.ஏக்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலைஞர் நூற்றாண்டு முத்தமிழ்த்தேர் அலங்கார ஊர்திக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, மாணவ மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அப்போது, பள்ளி மாணவிகளுடன் இணைந்து நடனம் ஆடினார் அமைச்சர் பொன்முடி. மாணவிகள் அமைச்சர் பொன்முடியை டான்ஸ் ஆட அழைக்க, அவரும் ஜாலியாக வந்து, பாடலுக்கு ஏற்ப ஸ்டெப் போட்டு அசத்தினார். மூத்த அமைச்சர், மாணவிகளுடன் சேர்ந்து டான்ஸ் ஆடி 'வைப்’ செய்ததைப் பார்த்து, அங்கிருந்தவர்கள் உற்சாக ஆரவாரம் செய்தனர். அமைச்சர் பொன்முடி டான்ஸ் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அண்மையில் விழுப்புரத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற விளையாட்டு போட்டியினை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்து மாணவர்களுடன் இணைந்து, “கபடி கபடி” என பாடிச் சென்று கபடி விளையாடிய நிகழ்வு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications