"கூசாமல் பொய் சொல்பவர் அன்புமணி.. " எரிமலை போல் வெடித்த ராமதாஸ்! அதிர்ச்சியில் பாமக தொண்டர்கள்
விழுப்புரம்: தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ் தனது மகன் அன்புமணி மீது சரமாரியாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார். அன்புமணி கூசாமல் பொய் சொல்பவர் எனச் சாடிய ராமதாஸ், பொய்களைக் கூறியே கட்சி நிர்வாகிகளை தனது கூட்டத்தில் பங்கேற்கவிடாமல் தடுத்துவிட்டதாகவும் சாடியுள்ளார். ராமதாஸின் இந்த குற்றச்சாட்டுகள் பாமக தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே நீண்ட காலமாகவே மோதல் இருந்து வருகிறது. கட்சி நிர்வாகிகள் மோதல் சரியாகிவிட்டது எனச் சொன்னாலும் இரு தலைவர்களின் நடவடிக்கை அதற்கு நேர் எதிராகவே இருக்கிறது. இதற்கிடையே இன்று தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ் தனது மகன் அன்புமணி மீதே பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்

ராமதாஸ்
இது குறித்து தைலாபுரத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராமதாஸ், "இருவருக்கும் உள்ள பிரச்சினையைத் தீர்க்க 14 பஞ்சாயத்துகளை வைத்துள்ளனர். இந்த கட்சியில் நான் மொத்தம் 34 அமைப்புகளை உருவாக்கி இருக்கிறேன். அவர்கள் வந்து எனக்குப் பஞ்சாயத்து செய்தார்கள். கடைசியில் ஒரு முடிவு எடுத்தனர். அதாவது கட்சியை தைலாபுரம் தோட்டத்தில் இருந்து நான் பார்த்துக் கொள்கிறேன்.. மக்களை அன்புமணி சந்திப்பார் என முடிவெடுத்தார்கள். 14 பஞ்சாயத்துகளிலும் இதைத் தான் சொன்னார்கள்.
ஆனால், நான் யாரையும் சந்திக்காமல் உள்ளேயே இருக்க வேண்டும் என்பதையே அன்புமணி எதிர்பார்த்தார். இதை எல்லாம் நான் இதுவரை வெளியே சொல்லியது இல்லை. இதுதான் பிரச்சினை.
கூசாமல் பொய் சொல்பவர்
அவர் பொய்யைக் கூசாமல் பேசுவார். அவர் சொன்னதில் இரு பொய்களை மட்டும் இங்குச் சொல்கிறேன். நான் 108 மாவட்டச் செயலாளர்களையும் கூட்டத்திற்கு அழைத்திருந்தேன். அத்தனை மாவட்டச் செயலாளர்களுக்கும் அவரே தொலைப்பேசி செய்து ஆலோசனைக் கூட்டத்திற்குப் போக வேண்டாம் எனக் கூறியவர் அன்புமணி. இதனால் 8 பேர் மட்டுமே வந்தனர்.
அன்றே செத்துவிட்டேன்
இவரே போன் செய்து சொன்னதால் மற்ற 100 பேர் வரவில்லை.. மாவட்டச் செயலாளர்கள் ஏன் எனக் கேட்ட போது, தன்னை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கவுள்ளார் என பொய் சொல்லி இருக்கிறார் அன்புமணி. இதனால் தான் 100 மாசெக்கள் வரவில்லை. 8 பேர் மட்டுமே வந்தனர். அன்றைய தினமே நான் செத்துவிட்டேன். நான் பதவி கொடுத்த 100 பேரே வரவில்லை. அன்றே எனது உயிர் போய்விட்டது.
அன்புமணியை நான் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவேன் என்பது கற்பனை கூடச் செய்ய முடியாத ஒன்று. இதை உலகம் ஏற்குமா.. கட்சி ஏற்குமா.. மக்கள் ஏற்குமா.. இது அவர் சொன்ன முதல் பொய்.
எரிமலை போல வெடித்த ராமதாஸ்
கட்சி சார்பில் சமூக ஊடக பேரவை கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்பவர்களை அடிக்க 6 அடியாட்களைத் தயாராக வைத்திருப்பதாகக் கூறியிருக்கிறார். தமிழகம் முழுக்க தொண்டர்களிடம் சென்று கட்சியை வளர்த்தவன் நான். இதுவரை அடிதடியில் ஈடுபட்டதே இல்லை. அப்படி எந்தவொரு குற்றச்சாட்டும் இல்லை. ஆனால், நான் அடியாட்களை வைத்திருப்பதாகச் சொல்லி இருக்கிறார். இதனால் பலரும் அந்த கூட்டத்தைப் பங்கேற்கவில்லை. நமக்கு எல்லாம் பொய்யே வராது. ஆனால், அவர் கூசாமல் பொய் சொல்வார்" என்று ஆவேசமாக அன்புமணி மீதான புகார்களை வெடித்துத் தள்ளினார்.












Click it and Unblock the Notifications