காரில் வந்த பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சல்யூட் அடித்த காவலர்.. இணையத்தில் பரவும் வீடியோ!
விழுப்புரம்: அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பாதயாத்திரை இன்று விழுப்புரத்தில் நடந்தது. அப்போது அவரை வரவேற்க நின்றிருந்த தொண்டர்களுடன் பாதுகாப்பிற்காக போலீசாரும் நின்றுகொண்டிருந்தனர். அப்போது போலீஸ் சீருடையில் இருக்கும் ஒரு காவலர் அண்ணாமலைக்கு சல்யூட் அடிக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார். அண்ணாமலையின் பாத யாத்திரை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. வரும் 27 ஆம் தேதி பல்லடத்தில் அண்ணாமலையின் யாத்திரை நிறைவு பெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். பல்லடத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கும் பாஜக ஏற்பாடு செய்து வருகிறது.

பல லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்றும் பாஜகவினர் கூறி வருகிறார்கள். அண்ணாமலை தனது பாத யாத்திரையின் போது கட்சி தொண்டர்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார். அப்போது தமிழகத்தில் ஆளும் திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார். அதேபோல், அதிமுகவையும் சாடி வருகிறார். இந்த நிலையில், அண்ணாமலையின் பாதயாத்திரை இன்று விழுப்புரத்தில் நடைபெற்றது.
பாத யாத்திரையில் பங்கேற்க வந்த அண்ணாமலையை காண பாஜகவினர் வந்து இருந்தனர். பாதுகாப்பு பணியில் போலீசாரும் ஈடுபட்டு இருந்தனர். அண்ணாமலை வந்த போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீஸ் ஒருவர் சல்யூட் அடித்தது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. அண்ணாமலைக்கு போலீஸ் சல்யூட் அடித்த வீடியோ சமூக வலைத்தலங்களில் வைரலாகி வருகிறது.
முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நீலகிரி மாவட்டத்தில் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது ஊட்டி காபி ஹவுஸ் சதுக்கத்தில் பணியில் இருந்த காவலர் கணேசன், அண்ணாமலையுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். சீருடையில் இருந்த காவலர் கணேசன் அண்ணாமலையுடன் செல்பி எடுத்துக்கொண்டது விமர்சனத்திற்கு உள்ளானது. இதையடுத்து, காவலர் கணேசன் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
அரசுப் பணியாளர்கள் பணியில் இருக்கும் போது அரசியல்வாதிகளுடன் சேர்ந்து புகைப்படம் எடுக்கக்கூடாது என்பதால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. அதேபோல், இந்த ஆண்டு துவக்கத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அண்ணாமலை நடைபயணம் சென்றார். அப்போது, போலீஸ் சீருடை அணிந்து 2 சிறப்பு எஸ்.ஐ.க்கள் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். இதையடுத்து இரண்டு பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications