நான் கருப்பா குள்ளமா இருப்பதால் தான் என் பேச்சை யாரும் கேட்பது இல்லை.. சீமான் பரபர பேச்சு!
விழுப்புரம்: நான் கருப்பாக, குள்ளமாக இருப்பதால் தான் என் பேச்சை மக்கள் கேட்பது இல்லை. நான் வெள்ளையாக இருந்து, ஆங்கிலத்தில் பேசி இருந்தால் மக்கள் கேட்டிருப்பார்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வரும் ஜூலை 10 ஆம் தேதி நடைபெறும் நிலையில் இன்று இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது. இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்துள்ளது. முன்னதாக இன்று விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயாவுக்கு ஆதரவாக ஒரத்தூர் பகுதியில் வாக்கு சேகரித்தார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

அப்போது பேசிய சீமான், "நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்காதவர்கள் மீது வருத்தம் தான், கோபமே கிடையாது. அவர்களைப் பார்க்கும்போது பாவமாக இருக்கும். மக்கள் சரி இல்லை என்று மட்டும் என் முன்பாகச் சொல்லிவிடாதீர்கள். ஏனென்றால் அதில் இருந்து தான் நாமும் வந்திருக்கிறோம். எனக்கு ஓட்டு போட மறுப்பவர்கள் என் ஆத்தாவும், அப்பனும் தான். என் சித்தப்பன், பெரியப்பன், மாமன் மச்சான் தான்.
நான் கருப்பாக, குள்ளமாக இருப்பதால் என் பேச்சை நிறைய மக்கள் கேட்பது இல்லை. நான் வெள்ளையாக இருந்து, "The Politics is.." என்று ஆங்கிலத்தில் பேசி இருந்தால் மக்கள் கேட்டு இருப்பார்கள். கருப்பாக இருக்கும் கரும்பில் இருந்து தான் அவ்வளவு இனிப்பாக இருக்கும் சர்க்கரை வருகிறது என்று நான் பலமுறை சொல்லிவிட்டேன். தயவுசெய்து எங்களை நம்புங்கள்.
விட்டுத்தான் பிடிக்க வேண்டும். பொறுமை மிக அவசியம். கத்திரிக்காய் காய்த்து வரவே குறைந்தது 60 நாள் காத்திருக்க வேண்டியிருக்கிறது. ஒரு கொள்கையை விதைத்து, 60 ஆண்டு குப்பையை, வெறும் 5 ஆண்டுகளில் அகற்றுவது சிரமம். எத்தனை பொக்லைன் வைத்தாலும் சரிவராது. ஒருநாள் எல்லாம் மாறும், ஆனால் ஒரே நாளில் அல்ல.
நான் தமிழன் என்பது தான், எனது அடையாளம். பலர் சாதியை இனம் என்று பேசி வருகின்றனர், அது தவறு. ஒரு மொழியை பேசும் குழுக்கள் தான் இனம். சாதியை நம்பி ஓட்டு வாங்கும் எந்த தலைவனும் இதைப் பேச மாட்டான். நான் போதிக்கும் போது உங்களுக்கு புரியாது, பாதிக்கும் போது உங்களுக்கு புரியும்.
மதம் மாறிக்கொள்ளக் கூடியது, மதம் உன் அடையாளம் அல்ல. சிறுபான்மை என்பவர்களுக்கு மூளையில் தான் சிறுபான்மை. இளையராஜா பெரும்பான்மை இந்து, அவரது மகன் இஸ்லாம் என்பதால் சிறுபான்மை. ஏ.ஆர்.ரஹ்மான் சிறுபான்மை. அவரது சொந்த அக்கா மகன் ஜிவி பிரகாஷ் பெரும்பான்மை. இதுதான் மத அடையாளம். சாதி, மதம் எல்லாம் நேற்று வந்தது. மதத்தை வைத்து எப்படி மனிதனை கணக்கிடுவது?
மொழியும் இனமும் மாறிக்கொள்ள முடியாது. சாதி, மதம், கடவுளை வைத்து அரசியல் செய்பவர்கள் மக்களைப் பற்றி சிந்திப்பதில்லை. திமுகவை அகற்றாமல் இந்த மண்ணில் நல்ல அரசியல் இருக்காது. இந்து, சமஸ்கிருதத்தை மத்திய அரசு திணிக்கிறது. இந்தக் கட்சிகளை ஆதரிக்கிறார்கள். நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போடாத மக்கள் நிச்சயம் ஒருநாள் வெட்கப்படுவார்கள்." எனப் பேசியுள்ளார் சீமான்.












Click it and Unblock the Notifications