தவெக மாநாடு பேனர்களை அகற்றும் போலீசார்.. வாக்குவாதம்! விழுப்புரம் பகுதியில் என்ன நடக்கிறது?
விழுப்புரம்: தமிழக வெற்றிக் கழக மாநாடு நடைபெறும் இடம் அருகே சாலையோரம் வைக்கப்பட்டிருந்த பேனர்களை போலீசார் அகற்றியதால், தவெக நிர்வாகிகள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நாளை விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெறுகிறது. திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே வி.சாலையில் சுமார் 85 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் மாநாட்டுத் திடலும், சுமார் 207 ஏக்கர் பரப்பளவில் வாகன நிறுத்துமிடங்களும் அமைக்கப்பட்டு உள்ளன.

மாநாட்டிற்கு இலட்சக் கணக்கானோர் வருவார்கள் என்பதால் சுமார் 700க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை அமைத்து மாநாட்டு நிகழ்வுகள் முழுவதையும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் மாநாட்டில் யாராவது தவறினால் அல்லது வேறு பகுதிக்கு சென்று விட்டால் அவர்களை கண்டுபிடித்து தரவும் காணாமல் போனவர்களை அணுகுவதற்கும் Missing center மாநாட்டு திடல் பகுதிகளிலும், நான்கு பார்க்கிங் பகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ளது.
தவெக மாநாட்டில் காமராஜர், பெரியார், அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களின் பிரம்மாண்ட கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. மாநாட்டிற்கு வருகை தரும் தொண்டர்களையும், பொதுமக்களையும் அழைத்து வர கட்சி நிர்வாகிகள் பல்வேறு முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகம் மாநாடு திடலில் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் கூட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது செங்கல்பட்டு தொடங்கி, விழுப்புரம் வரை தேசிய நெடுஞ்சாலையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் பேனர்களை அகற்றுமாறு வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டிருந்த பல பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன. விஜய் ரசிகர்கள், தவெக தொண்டர்கள் வைத்த பேனர்களை போலீசார் கிழிப்பதாகவும், தேசப்படுத்துவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
நெடுஞ்சாலையை ஒட்டி பத்து மீட்டர் தூரம் தள்ளித்தான் பேனர் வைக்க வேண்டும். மாநாடு நடத்துவது தொடர்பாக காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்ட நிபந்தனைகளின் படி ஆபத்து விளைவிக்கக் கூடிய வகையில் பேனர்கள் வைக்க கூடாது என்ற நிபந்தனை போலீசாரால் விதிக்கப்பட்டது. அதனை மீறி வாகனங்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் பேனர்களை வைத்துள்ளதால் அந்த பேனர்களை அகற்றி வருவதாக போலீசார் கூறியுள்ளனர்.

அதேசமயம், தவெக நிர்வாகிகள், ஐந்து நாட்களுக்கு முன்பே பேனர்களை வைத்துவிட்டோம். அப்போது இது பற்றி கூறியிருந்தால் நாங்கள் இடத்தை மாற்றி வைத்திருப்போம். மாநாடு நாளை நடைபெற உள்ள நிலையில் இன்று பேனர்களை அகற்றுமாறு போலீசார் கூறி வருவதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.
மற்ற கட்சியினர் மாநாடு, பொதுக்கூட்டங்களின் போது இதேபோன்று பேனர்கள் வைத்த போது போலீசார் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை, ஆனால் நாங்கள் பேனர் வைக்கும் போது மட்டும் அகற்றுகின்றனர் என தவெக நிர்வாகிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.












Click it and Unblock the Notifications