ரயிலில் இருந்து குதித்து தவெக தொண்டர் பலி? விஜய் மாநாடு இடத்தில் என்ன நடந்தது? போலீஸ் விளக்கம்
விழுப்புரம்: விக்கிரவாண்டி வி.சாலையில் இன்று நடக்கும் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பங்கேற்க மாநிலம் முழுவதும் இருந்து ஏராளமான தொண்டர்கள் நேற்றிரவு முதல் வருகின்றனர். இதற்கிடையே தான் வி.சாலையில் விஜய் மாநாட்டு மேடை மற்றும் மின்விளக்கை பார்த்ததும் உற்சாகத்தில் ரயிலில் இருந்து தவெக தொண்டர் ஒருவர் கீழே குதித்தபோது இறந்ததாக வெளியான தகவலில் உண்மையில்லை என்று போலீஸ் விளக்கம் அளித்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி உள்ள நடிகர் விஜயின் முதல் அரசியல் மாநாடு என்பது இன்று நடைபெற உள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி சாலையில் இன்று மாலை 4 மணிக்கு மாநாடு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் நடிகர் விஜய் பங்கேற்று கட்சி கொடியை 100 அடி உயர கொடிக்கம்பத்தில் ஏற்றி வைத்து சிறப்புரையாற்றுகிறார். மேலும் இன்று கட்சியின் கொடிக்கான விளக்கம் மற்றும் கட்சியின் கொள்கைகளை அவர் வெளியிடுகிறார். இதனால் இந்த மாநாடு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று இரவு முதலே தொண்டர்கள் ஏராளமான வாகனங்களில் வி சாலையில் குவிந்துள்ளனர்.கையில் தவெகவின் கொடி, கழுத்தில் தவெக துண்டு அணிந்து தொண்டர்கள் தொடர்ந்து மாநாட்டு அரங்கிற்கு வருகை புரிந்து வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து கார், வேன், பஸ், லாரி என்று ஏராளமான வாகனங்கள் மாநாடு நடக்கும் இடத்தை நோக்கி சென்று வருகிறது.
இந்நிலையில் தான் சென்னையில் இருந்து ரயில் மூலம் விக்கிரவாண்டிக்கு ஏராளமானவர்கள் சென்று வருகின்றனர். அந்த வகையில் நிதிஷ் குமார் என்பவர் தனது நண்பர்களுடன் ரயிலில் வந்ததாக தகவல் வெளியானது. அதோடு இன்று அதிகாலையில் இந்த ரயில் செல்லும் தண்டவாளத்தையொட்டி 50 மீட்டர் இடைவெளியில் தான் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டு பந்தல் உள்ளது.
இதனால் மாநாட்டு பந்தலில் மின்விளக்குகள் ஒளிர்ந்துள்ளது. இதனை பார்த்த உற்சாக மிகுதியில் நிதிஷ் குமார் உள்பட 2 பேர் ரயிலில் இருந்து கீழே இறங்க முடிவு செய்ததாகவும், மெதுவாக சென்ற ரயிலில் இருந்து இருவரும் கீழே குதித்ததாகவும் கூறப்பட்டது. இதில் கீழே விழுந்து படுகாயமடைந்த நிதிஷ் குமார் படுகாயமடைந்து இறந்ததாக தகவல்கள் பரவின.
ஆனால் இந்த தகவலை விழுப்புரம் போலீஸ் முற்றிலுமாக மறுத்துள்ளது. அதாவது ரயிலில் இருந்து தவறி விழுந்தவர் பெயர் நிதிஷ் குமார் தான். ஆனால் அவர் சிகிச்சையில் தான் உள்ளார். இறந்ததாக வெளியான தகவலில் உண்மையில்லை. அதேபோல் அவர் தவெக தொண்டர் என்பதிலும் உண்மையில்லை. அவர் சென்னையில் இருந்து தென்மாவட்டத்துக்கு ரயிலில் பயணம் செய்துள்ளார்.
இந்த வேளையில் வி.சாலையில் விஜய் மாநாடு இடம் மின்னொளியில் ஜொலிஜொலித்துள்ளது. இதையடுத்து அவர் ரயில் பெட்டியின் வாசலில் நின்று பார்த்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் தவறி கீழே விழுந்து காயமடைந்து சிகிச்சையில் உள்ளார் என போலீஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சென்னை தேனாம்பேட்டை சிக்னலில் நடிகர் விஜயின் கட்சியை சேர்ந்த 2 தொண்டர்கள் சென்ற இருசக்கர வாகனமும், லாரியும் மோதியது. அதில் ஒருவர் பலியான நிலையில் இன்னொருவர் சிகிச்சை பெற்று வருகிறார். அந்த வகையில் தற்போது வரை விபத்து வகையில் 2 பேர் பலியாகி உள்ளனர் என்பது சோகமான விஷயமாகும்.












Click it and Unblock the Notifications