விழுப்புரத்தில் பரபரப்பு.. நடிகை ஊர்வசியின் தம்பி மனைவி உட்பட இருவர் தூக்கிட்டு தற்கொலை
விழுப்புரம்: விழுப்புரத்தில் பிரபல நடிகை ஊர்வசியின் தம்பி மனைவி உள்பட இருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் வில்லியம் லேஅவுட் 2-வது தெருவில் சுசீந்திரன் (54) என்பவர் தனது தங்கை பிரமிளா (52) உடன் வசித்து வந்தார். சுசீந்திரன் சினிமா துணை நடிகையிடம் உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.
பிரமிளாவின் கணவர் கமல், நடிகை ஊர்வசியின் தம்பி ஆவார். கருத்து வேறுபாடு காரணமாகக் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கமல் பிரமிளாவை பிரிந்து சென்றுவிட்டார்.

துர்நாற்றம்
இதனால் சுசீந்திரனும், பிரமிளாவும் விழுப்புரத்தில் வசித்து வந்தனர். போதிய வருமானம் இல்லாததால் அவர்கள் வறுமையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் சுசீந்திரன் வீட்டில் இருந்து, நேற்று முன்தினம் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வீட்டிற்குச் செல்ல முயன்றுள்ளனர். இருப்பினும், வீடு உள்பக்கம் பூட்டப்பட்டு இருந்ததால், அவர்கள், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

தூக்கிட்டு தற்கொலை
அப்போது உள்ளே இருவரும் தனித்தனி அறைகளில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை போலீசார் கண்டறிந்தனர். இருவரது உடல்களும் அழுகிய நிலையில் இருந்தன. இருவரும் கடந்த 5 நாட்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். அப்போது சுசீந்திரன் வீட்டில் போலீசார் சோதனை நடத்துகையில் தற்கொலை செய்யும் முன்பு எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதத்தை போலீசார் கண்டறிந்தனர். அதில் வறுமை காரணமாகவே இருவரும் தற்கொலை செய்து கொள்வதாகவும் இதற்கு யாரும் காரணம் இல்லை என்றும் கூறப்பட்டு இருந்தது.

என்ன காரணம்
மேலும், வீட்டு வாடகை செலுத்த முடியாததால் வீட்டிலுள்ள பொருட்களை விற்று பணத்தை வீட்டின் உரிமையாளருக்கு வழங்கிவிடுங்கள் என்றும் உடல்களைப் பிரேதப் பரிசோதனை செய்யாமல் நேரடியாக அடக்கம் செய்யும்படியும் கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து தற்கொலை செய்து கொண்ட இருவரின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார், உடல்களைப் பிரேதப் பரிசோதனை செய்ய முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தீவிர விசாரணை
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஊர்வசியின் சகோதரியும், நடிகையுமான கல்பனா தான் பிரமிளாவுக்கு பண உதவி செய்து வந்துள்ளார். இருப்பினும், அவர் உயிரிழந்த பின்னர், யாரும் பண உதவி செய்யாததால் வறுமையின் பிடியில் சிக்கி இருவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications