அரசு வேலை வாங்கி தருவதாக 58 பேரிடம் ரூ70 லட்சம் மோசடி- விழுப்புரம் பாஜக நிர்வாகி அதிரடி கைது
விழுப்புரம்: தமிழக அரசு பணிகளை வாங்கி தருவதாக விழுப்புரம் சுற்று வட்டாரங்களில் 58 பேரிடம் ரூ70 லட்சம் மோசடி செய்த விழுப்புரம் மாவட்ட பாஜக கல்வியாளர் பிரிவு செயலாளர் சங்கரன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை தெருவை சேர்ந்தவர் ஹரிஷ் மனைவி தங்கமயில் (வயது 41). இவருடைய தந்தை கலியமூர்த்தி திருவெண்ணெய்நல்லூர் மின்வாரிய அலுவலகத்தில் முதல்நிலை முகவராக பணிசெய்து கடந்த 2009-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அதே மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு திருவெண்ணெய்நல்லூர் அருகே டி.புதுப்பாளையம் மேட்டுத்தெருவை சேர்ந்த சங்கரன் (51) என்பவர் பழக்கமானார்.
கடந்த 22.3.2019 அன்று கலியமூர்த்தியின் வீட்டிற்கு சென்று அவரிடம், தற்போது மின்சார வாரியத்தில் கேங்மேன், உதவி பொறியாளர் வேலை காலிப்பணியிடத்திற்கு அறிவிப்பு வெளியாக உள்ளது; அரசியல் பிரமுகர்கள் சிலருடன் பழக்கம் இருப்பதாகவும், அவர்கள் மூலமாக தங்களுக்கு கீழ் பணிபுரியும் தற்காலிக ஊழியர்களுக்கு மின்வாரியத்தில் கேங்மேன், உதவி பொறியாளர் காலிப்பணியிடங்களுக்கு வேலை வாங்கித்தருவதாகவும், இதற்காக நபர் ஒருவருக்கு ரூ.3 லட்சம் செலவாகும் என்றும் கூறியுள்ளார் சங்கரன்.
இதை நம்பிய கலியமூர்த்தி மற்றும் அவரது கீழ் பணிபுரியும் 40 பேர்களிடம் தலா ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் வீதமும், 18 பேரிடம் இருந்து தலா ரூ.25 ஆயிரம் வீதமும் ஆக மொத்தம் ரூ.94 லட்சத்து 50 ஆயிரத்தை சங்கரன் பெற்றார். ஆனால் பல மாதங்களாகியும் மேற்கண்ட நபர்களுக்கு சங்கரன், வேலை ஏதும் வாங்கித்தராமல் ஏமாற்றி வந்தார்.
இதனிடையே கடந்த 2020-ம் ஆண்டு கலியமூர்த்தி உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். அதன் பிறகு சங்கரன், தன்னிடம் பணம் கொடுத்தவர்களுக்கு கண்டிப்பாக வேலை வந்துவிடும் என்று கூறினார். ஆனால் வேலை ஏதும் கிடைக்கவில்லை. இந்த சூழலில் 22.2.2021 அன்று மின்சார வாரியத்தில் இருந்த காலிப்பணியிடங்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டு விட்டதை அறிந்த மேற்கண்ட நபர்கள், சங்கரனிடம் சென்று தாங்கள் கொடுத்த பணத்தை திருப்பித்தரும்படி பிரச்சனை செய்தனர். அதன் பின்னர் பல தவணைகளாக ரூ.24 லட்சத்து 50 ஆயிரத்தை மட்டும் சங்கரன் திருப்பிக் கொடுத்துள்ளார்.
ஆனால் எஞ்சிய ரூ.70 லட்சத்தை உரியவர்களுக்கு திருப்பித்தராமல் ஏமாற்றி மோசடி செய்துவிட்டார். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள்,
விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ஸ்ரீநாதாவிடம் புகார் மனு கொடுத்தனர். இம்மனுவை பெற்ற அவர், அதனை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு அனுப்பி வைத்து உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். அதன்பேரில் சங்கரன் மீது ஏமாற்றும் நோக்கம், நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் ஏ டி எஸ் பி இருதயராஜ், சிறப்பு உதவி ஆய்வாளர் அசோகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சங்கரனை போலீசார் கைது செய்து விழுப்புரம் நீதிமன்றத் தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைதான சங்கரன் தற்போது சித்தலிங்கமடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். ஆசிரியர் சங்கரன் விழுப்புரம் மாவட்ட பாஜக கல்வியாளர் பிரிவு செயலாளர் பொறுப்பில் உள்ளவர் என தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications