விழுப்புரம் அரசு பள்ளியில் விஜய் சேதுபதி.. மாணவர்களுக்கு திடீர் பரிசு மழை.. அங்கே தான் 2 டவுட்டு
விழுப்புரம்: விழுப்புரம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நடந்த ஒரு பாராட்டு விழா, இப்போது நடிகர் விஜய் சேதுபதியை மீண்டும் கவனிக்க வைத்திருக்கிறது. 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தினர் பதக்கம், பரிசுகளை வழங்கியிருக்கிறார்கள். இதற்கு நடிகர் விஜய் சேதுபதி நன்றி தெரிவித்து இப்போது ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். இந்த வீடியோ 2 விதமான சந்தேகங்களை கிளப்பி விட்டுள்ளது.
விழுப்புரத்தில் அரசுப் பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தினர் பாராட்டு விழா நடத்தினார்கள்.

விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தினர்
மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டிய நிலையில், இதற்கு நடிகர் விஜய் சேதுபதி நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டிருக்கிறார்.
அந்த வீடியோவில் பேசியிருக்கும் விஜய் சேதுபதி, "நம் விழுப்புரம் மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு படித்த மாணவர்களை வாழ்த்தி பதக்கமும், பரிசும் வழங்கியிருக்கின்றனர். இதில் கலந்துகொண்ட எல்லோருக்கும் வாழ்த்துகள். இந்த வேலையைச் சிறப்பாகச் செய்த என் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்களுக்கு அன்பும், நன்றியும்.. லவ்யூ" என்று தெரிவித்திருக்கிறார்.
விஜய் சேதுபதி எதுக்காக இந்த திடீர் வீடியோவை பதிவிட்டார் என்பது தெரியவில்லை. ஆனால், சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசிய சில கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன. இதற்கு தவெக ஆதரவாளர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
திடீரென எதுக்கு வீடியோ
இந்த விவகாரம் தொடர்பாக, உடனடியாக விஜய் டிவி நிர்வாகமும் விளக்கம் தந்தது. விஜய் சேதுபதியும், அந்தக் கருத்துகள் குறிப்பிட்ட எந்த ஒரு நபரையோ அல்லது அரசியல் இயக்கத்தையோ சுட்டிக்காட்டிப் பேசப்படவில்லை என்று தெளிவுபடுத்தியிருந்தார். இருந்தபோதிலும், தவெக தரப்பில் சிலர் தொடர்ந்து விஜய் சேதுபதியை விமர்சித்து கொண்டுதான் உள்ளனர்.
இந்த சர்ச்சைகள் ஓரளவுக்கு ஓய்ந்த நிலையில், தனது அகில இந்திய விஜய் சேதுபதி நற்பணி இயக்கத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் புதிய தலைமை ஒருங்கிணைப்பாளராக பிரசாத் என்பவரை விஜய் சேதுபதி நியமித்திருந்தார்.
மாநிலம் முழுவதும் உள்ள ரசிகர் மன்ற நிர்வாகிகளை ஒருங்கிணைத்தல், மாவட்ட மற்றும் மண்டல அளவிலான அமைப்புப் பணிகளை வலுப்படுத்துதல், புதிய நிர்வாகிகளை நியமித்தல், உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்துதல் உள்ளிட்ட பொறுப்புகள் புதிய தலைமை ஒருங்கிணைப்பாளர் பிரசாத்திடம் வழங்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.
டேமேஜ் கன்ட்ரோல்?
இப்படிப்பட்ட சூழலில், விழுப்புரத்தில் ரசிகர் மன்றத்தினர் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்தி, அதற்கு விஜய் சேதுபதி நேரடியாக வீடியோ மூலம் நன்றி தெரிவித்திருப்பது கவனம் பெற்றுள்ளது. இந்த வீடியோவின் பின்னணி குறித்து விஜய் சேதுபதி தரப்பில் எந்த விளக்கமும் தெரிவிக்கப்படவில்லை என்றாலும், திடீரென இப்படியொரு வீடியோவை விஜய் சேதுபதி வெளியிட்டிருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
ஒருவேளை, ரசிகர் மன்றத்தின் செயல்பாடுகளுக்கு அவர் வெளிப்படையாக ஆதரவு தெரிவிப்பது போன்ற இந்த நடவடிக்கை, அவரது நற்பணி இயக்கத்தை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இருக்குமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
அல்லது சமீபத்திய பிக்பாஸ் சர்ச்சைக்குப் பிறகு விஜய் சேதுபதி வெளியிட்டிருக்கும் இந்த வீடியோ, டேமேஜ் கன்ட்ரோல் செய்யும் முயற்சியா என்ற கேள்வியும் சிலரிடம் எழுந்துள்ளது.
ஒருவேளை விஜய் சேதுபதியும் அரசியலுக்கு வரப்போகிறாரா? அரசியல் களத்துக்கு வருவதற்கான முன்னோட்டமாகத்தான் இந்தப் பணிகளை தொடங்குகிறாரா? என்றும் சந்தேகங்கள் வலுத்துள்ளன..!!


Click it and Unblock the Notifications
