செஞ்சி சிறுமியை தேடும்போது கிடைத்த எலும்புக்கூடு! விசாரணையில் வெளியான முக்கிய தகவல்!
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி காணாமல் போய் 34 நாட்கள் ஆகியிருக்கிறது. இந்நிலையில் பக்கத்தில் உள்ள சிறுவாடி காப்பு காட்டில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், மனித எலும்பு கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
7 வயது சிறுமி ஹேமலதா காணாமல் போய் 34 நாட்கள் ஆன நிலையில், சிபிசிஐடி போலீஸின் தேடுதல் வேட்டையில் இன்னும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
சிறுமி கடத்தப்பட்டு, கொலை செய்து புதைக்கப்பட்டிருக்கலாம் என்கிற கோணத்தில்.. பக்கத்தில் இருக்கும் காப்பு காட்டில் போலீசார் தீவிரமான சோதனையை நடத்தி வருகின்றனர். மோப்ப நாய்களுடன் காப்புக்காடு பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்ட போது, பரதன்தாங்கல் ஏரிப்பகுதி முட்புதரில்.. மனித எலும்புக்கூடு ஒன்று கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. எலும்புக்கூடு கிடந்த இடத்திற்கு அருகே.. வேட்டி, சட்டை, செருப்பு, விஷ பாட்டில் மற்றும் கீழ் பெண்ணாத்தூர் டாஸ்மாக் கடையில் வாங்கப்பட்ட மதுபாட்டில் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட எலும்புக்கூடு, சுமார் 50 வயதுடைய ஆணுடையதாக இருக்கலாம் எனவும், அவர் உயிரிழந்து சுமார் 3 மாதங்கள் ஆகியிருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகித்துள்ளனர். இந்த பகுதியில், கடந்த செப்டம்பர் மாதம் முதியவர் ஒருவர் காணாமல் போனார். ஒருவேளை, இந்த எலும்புக்கூடு அவருடையதாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
கைப்பற்றப்பட்ட எலும்புக்கூடு யாருடையது? என்பதை அறிவியல் பூர்வமாக உறுதி செய்ய.. மருத்துவ மற்றும் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில், சத்தியமங்கலம் போலீசார் எலும்புக்கூடு குறித்து தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அதே நேரம், காணாமல் போன 7 வயது சிறுமி ஹேமலதாவை தேடும் பணியை சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து தீவிரப்படுத்தி இருக்கின்றனர்.
போலீசாரின் வழக்கு விசாரணை

பொதுவாக, ஒரு வழக்கின் தேடுதலின் போது.. எதிர்பாராத விதமாக இப்படி இன்னொரு மனித எலும்பு கூடு கிடைத்தால், காவல்துறை அதனை புதிய மற்றும் தனி வழக்காக பதிவு செய்து.. சட்டபூர்வமான தடயவியல் நடைமுறையில் கையாளும். பழைய வழக்கின் தேடுதல் பணி ஒருபுறம் தொடரும் நிலையில், புதிய எலும்பு கூடு குறித்த விசாரணை தனியாக நடத்தப்படும். எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்ட இடத்தை சுற்றி உடனடியாக தடுப்புகள் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் அல்லது விலங்குகளால் தடயங்கள் சிதையாமல் பாதுகாக்கப்படும். எலும்புக்கூடு கிடந்த நிலை, அருகில் உள்ள உடைகள், காலணிகள் அல்லது பிற பொருட்களை தொடாமல் துல்லியமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கப்படும்.
சம்பந்தப்பட்ட பகுதியில், கிராம நிர்வாக அலுவலர் அல்லது காவல்துறை அதிகாரியின் புகாரின் அடிப்படையில்.. உள்ளூர் காவல் நிலையத்தில் இயற்கைக்கு மாறான மரணம் என புதிய வழக்கு பதிவு செய்யப்படும். சாட்சிகள் முன்னிலையில் எலும்புக்கூடு மற்றும் அங்கிருந்து பொருட்கள் அனைத்தும் பட்டியலிடப்பட்டு கைப்பற்றப்படும்.


Click it and Unblock the Notifications
