மீண்டும் மீண்டுமா? இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு..படக்கென ஆஃப் ஆன சிசிடிவி! விழுப்புரத்தில் பரபர..!
விழுப்புரம் : விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பழுது ஏற்பட்டது. வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டிருந்த 39 சிசிடிவி கேமராக்களில், மழை, காற்றால் 7 சிசிடிவி கேமராக்கள் பழுதானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
18வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் 3 கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றிருக்கும் நிலையில், இன்னும் 4 கட்ட வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்ற நிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை மையங்களில் வைக்கப்பட்டுள்ளது.
சிசிடிவி பழுது: அங்கு காவல்துறை மற்றும் துணை ராணுவத்தினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது மட்டுமல்லாமல் அரசியல் கட்சிகளின் முகவர்களும் அங்கு சுழற்சி முறையில் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் நீலகிரியில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஸ்ட்ராங் ரூமில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தன. அதிக வெப்பம் காரணமாக சாட் சர்க்யூட் ஏற்பட்டு கேமராக்கள் செயல் இழந்ததாகவும் பிரச்சனை எதுவும் இல்லை கட்சியினரை நேரில் அழைத்துச் சென்று காண்பிக்க தயார் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார்.
ஈரோட்டில் பழுது: இந்த நிலையில் 29ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தில் சித்தோடு வாக்கு எண்ணிக்கை மையத்தில் வைத்திருந்த சிசிடிவி கேமராக்கள் செயல் இழந்தது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து தொழில்நுட்பக் கோளாறு உடனடியாக சரி செய்யப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்து இருந்தார். அந்த பரபரப்பு ஓய்வதற்குள் அடுத்த நாளே மீண்டும் அந்த வாக்கு எண்ணிக்கை மையத்தில் சிசிடிவி செயல்படவில்லை என முகவர்கள் புகார் தெரிவித்தனர்.
மீண்டும் பழுது: இதேபோல் திருப்பூர், விழுப்புரத்திலும் சிசிடிவி பழுதானதால் அரசியல் கட்சியினர் பதற்றம் அடைந்தனர். அந்த பரபரப்பு ஓய்வதற்குள் விழுப்புரத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் மீண்டும் சிசிடிவி கேமராக்கள் செயல் இழந்தது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மூன்று அடுக்கு பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இன்று காலை விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
மழையால் பாதிப்பு: பலத்த இடி மின்னலுடன் கூடிய மழை பெய்த நிலையில் காலை 7 மணி அளவில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமுக்கான சிசிடிவி கேமராக்கள் திடீரென பழுதாகின. சுமார் ஒரு மணி நேரம் வரை ஏழு கேமராக்கள் இயங்கவில்லை எனவும் அதன் பின்னர் அது உடனடியாக சரி செய்யப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கடந்த முறை சிசிடிவி பழுது ஏற்பட்டபோது இனி இது போல் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என விசிக வேட்பாளர் ரவிக்குமார் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications