சார் தற்கொலை செய்யணும்.. ஒரு நாள் லீவு கொடுங்க.. மெசேஜ் அனுப்பிய விழுப்புரம் போலீஸ் எஸ்ஐ மாயம்
தற்கொலை செய்வதற்கு ஒரு நாள் விடுமுறை கொடுங்கள் என மெசேஜ் அனுப்பிய உதவி ஆய்வாளர் மாயம்
விழுப்புரம் : தற்கொலை செய்தவதற்கு ஒரு நாள் விடுமுறை கொடுங்கள் என தகவல் அனுப்பிய சப் இன்ஸ்பெக்டர் மாயமாகிவிட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் மகிபால். இவருடன் அதே காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வரும் ஒருவர் குற்றச் செயல்களுக்கு உடந்தையாக இருப்பதாக காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மகிபால் புகார் கூறியுள்ளார்.
ஆனால் சில நாட்களிலேயே அந்த உதவி ஆய்வாளர் மீது புகார் தெரிவித்த மகிபால் விக்கிரவாண்டியில் இருந்து ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார். கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக மகிபால் விழுப்புரத்தில் ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வருகிறார்.

புகார்
வேறு எஸ்ஐ குற்றம் செய்கிறார் என நாம் புகார் கொடுத்தால் நம்மையே ஆயுதப்படைக்கு மாற்றியுள்ளார்களே என நினைத்து தன்னை ஏன் மாற்றினீர்கள் என கேட்பதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்திக்க விடாமல் அங்கிருந்த போலீஸார் தடுத்ததாக கூறப்படுகிறது.

உதவி ஆய்வாளர்
இந்த நிலையில் உதவி ஆய்வாளர் மகிபால் ஓய்வு பெற இன்னும் 6 மாதங்களே உள்ளது. இதனால் தன்னிடம் எந்த விளக்கமும் கேட்காமல் கடந்த 6 மாதங்களாக தொடர்ந்து ஆயுதப்படையில் பணி செய்ய வைத்திருந்ததால் மகிபால் மிகுந்த மன உளைச்சலுக்குள்ளானார்.

உயிர் வாழ முடியாது
இதனால் தன்னால் உயிர் வாழ முடியாது என்றும் தற்கொலை செய்து கொள்ள போவதாகவும் அதற்கு தனக்கு ஒரு நாள் விடுப்பு தருமாறு போலீஸ் எஸ்பி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ஒரு மெசேஜ் அனுப்பியிருந்தார். இதையடுத்து அவர் நேற்று முன் தினம் பிற்பகல் திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சிக்குள்ளான போலீஸார் உதவி ஆய்வாளர் மகிபாலை பல இடங்களில் தேடி வருகிறார்கள்.

தற்கொலை
அவர் குறித்த தகவல் ஏதும் கிடைக்கவில்லை. தற்கொலை செய்து கொள்ள ஒரு நாள் விடுப்பு கேட்டுவிட்டு போலீஸாருக்கு மெசேஜே அனுப்பிய உதவி ஆய்வாளர் மாயமான சம்பவம் விழுப்புரம் மாவட்ட போலீஸாரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பெண் இன்ஸ்பெக்டர் ஒருவர் மாயமாகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications