பெரியார், காமராஜர்.. அப்படியே திடீரென திமுக நிறுவனர் அண்ணா சொன்னதையும் பேசிய விஜய்.. என்ன சொன்னார்
சென்னை: விக்கிரவாண்டியில் இன்று விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் நடிகர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர் தனது கட்சியின் கொள்கைகள் என்ன என்பதை விளக்கினார். குறிப்பாக ஐந்து தலைவர்கள் யார் யார் என்பது குறித்தும் விளக்கினார். அப்போது அவர் திமுக நிறுவனர் அண்ணா பேசியது குறித்தும் குறிப்பிட்டார். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு இன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்றது. அதில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் முதலில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள் விளக்கப்பட்டது. தொடர்ந்து பேசிய விஜய் தனது தனது கட்சியின் கொள்கை வழிகாட்டிகள் குறித்து விளக்கினார். அப்போது அவர் பல்வேறு தலைவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டுப் பேசினார்.
விஜய் பேச்சு: அப்போது பேசிய விஜய், "நமது கொள்கை தலைவர்கள்..நமது வழிகாட்டிகள் யார் என்பதைச் சொல்லப் போகிறேன். அவர்கள் அனைவரும் இந்த மண்ணில் வாழ்ந்தவர்கள் தான்.. இந்த மண்ணுக்காக வாழ்ந்தவர்கள் தான். இந்த மண்ணுக்கு அங்கீகாரம் வாங்கி தந்தவர்கள். இதனால் அந்த மண்ணின் அடையாளமாகவே மாறியவர்கள்.
முதலில் பகுத்தறிவு புரட்சியாளர் தந்தை பெரியார்.. என்னது பெரியார் கொள்கை தலைவரா என்று ஒரு கூட்டம் கூச்சல் போட்டுக் கொண்டு பெயிண்ட் டப்பா எடுத்துக் கொண்டு வருவார்கள்.. ஆம். பெரியார் எங்கள் கொள்கை தலைவர் தான். பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையை நாங்கள் கையில் எடுக்கப் போவது இல்லை. அதில் எங்களுக்கு உடன்பாடும் இல்லை. யாருடைய கடவுள் நம்பிக்கையிலும் நாங்கள் எதிரானவர்கள் இல்லை.
அண்ணா குறித்து பேச்சு: அண்ணா சொன்னது போல ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதே எங்கள் நிலைப்பாடு. ஆனால், பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றம், சமூக நீதி, சமூக சீர்திருத்தம், பகுத்தறிவு சிந்தனை ஆகியவற்றை நாம் முன்னெடுக்கப் போகிறோம்.
காமராஜர்: அடுத்து வழிகாட்டி பச்சை தமிழர் காமராஜர். இந்த மண்ணில் மதச்சார்பின்மை, நேர்மையான நிர்வாகத்திற்கும் முன்னுதாரணமாக இருப்பவர். எனவே, அவரையும் வழிகாட்டியாக ஏற்கிறோம். இந்திய அரசியல் சாசனத்தை ஆக்கிக் காட்டியவர் அம்பேத்கர். இந்தியாவில் இந்த பெயரைக் கேட்டாலே சமூகத்தில் ஏற்ற தாழ்வு ஏற்படுத்த நினைப்போர் நடுங்கிப் போவார்கள். வகுப்புவாத பிரதிநிதித்துவத்தை நிலைநாட்டப் போராடிய அம்பேத்கரும் எங்கள் வழிகாட்டி.
பெண் தலைவர்கள்: பெண்களை வழிகாட்டியாகக் கொண்ட கட்சி நமது தவெக மட்டும் தான். நாம் வழிகாட்டியாக ஏற்றுக்கொண்ட இரு பெண் தலைவர்களில் ஒருவர் வீராங்கனை இந்த மண்ணைக் கட்டி ஆண்ட பேரரசி வேலுநாச்சியார். தொந்த வாழ்கையில் நடந்த சோகத்தை மறந்துவிட்டு இந்த மண்ணிற்காகப் போராடியவர் வேலுநாச்சியார்.
மற்றொருவர் முன்னேறத் துடிக்கும் சமூகத்தில் பிறந்து.. இந்த மண்ணின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்ட அஞ்சலை அம்மாள். சொத்துக்களை இழந்தாலும் சுயநலம் பார்க்காமல் சுதந்திரத்திற்காக போராடியவர் அஞ்சலை அம்மாள். இவர்களை உறுதியாகப் பின்பற்றுவதே நமது மதச்சார்பின்மை மற்றும் சமூக நல்லினத்திற்கான சான்று" என்றார்.
அதாவது பெரியார், காமராஜர், அம்பேத்கர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோரை தங்கள் கொள்கை வழிகாட்டியாக வைத்துக் கொண்டு தமிழக வெற்றிக் கழகம் செயல்படும் என்று விஜய் பேசினார்.












Click it and Unblock the Notifications