விருதுநகர் கூட்டு பாலியல் வழக்கு.. 4 பேருக்கு மேலும் 15 நாள் நீதிமன்ற காவல் - பழுதான போலீஸ் வாகனம்
விருதுநகர்: இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் முடிந்த நிலையில் மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவலை நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விருதுநகரில் 22 வயது இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் திமுகவை சேர்ந்த ஹரிஹரன், ஜுனத் அகமது, மாடசாமி, பிரவீன் ஆகிய 4 பேர் மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் என மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் இந்த வழக்கை தமிழக அரசு சிபிசிஐடி வசம் ஒப்படைத்ததை அடுத்து வழக்கு விசாரணையை சிபிசிஐடி போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். ஹரிஹரன் உட்பட 4 பேரை காவலில் எடுத்து விசாரித்த சிபிசிஐடி அதிகாரிகள் ஸ்ரீவில்லிப்புத்தூர் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு அவர்களை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த வாரம் இந்த 4 பேர் மீது மாவட்ட ஆட்சியர் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டடார். இந்நிலையில் நால்வருக்கும் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிந்தது. பின்னர் சிபிசிஐடி போலீசார் ஸ்ரீவில்லிபுத்தூர் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி கோபிநாத் மே மாதம் 2 ஆம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில் குற்றம்சாட்டப்பட்ட கைதிகளை சிறையில் அடைக்க போலீசார் வாகனத்தில் அழைத்து சென்றனர். அப்போது வாகனம் பழுதாகி நீதிமன்ற வளாகத்திலேயே நின்றது. இதனால் மதுரை மத்திய சிறைக்கு அழைத்து செல்ல முடியாமல் காவல்துறையினர் செய்வது அறியாமல் திகைத்து நின்றனர். பாதுகாப்புக்கு வந்த காவலர்கள் வாகனத்தில் இருந்து கீழே இறங்கி அங்கும் இங்குமாக தள்ளியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications